கோவையில் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் இறுதியாண்டு படிக்கும் தனியார் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, தகவலறிந்து அங்கு சென்ற குனியமுத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சின்ராஜ் மற்றும் தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்று மாணவர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது, அங்கிருந்த மாணவர்கள் தப்பிச் சென்ற போது, தலைமை காவலர் திருநாவுக்கரசு மீது இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஏற்றி விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக, சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் விக்னேஷ் (26) என்ற இளைஞரை கைது செய்தனர்.
விசாரணையில் விக்னேஷ் டிப்ளமோ படித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவரது நண்பர் ஒருவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், மாணவர்களிடையே மூன்று நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்ட போது, ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக மாச்சப்பாளையத்தை சேர்ந்த ஜெகன் என்பவருடன் சென்ற விக்னேஷ், போலீசாரிடம் சிக்காமல் இருக்க காவலர் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-செய்யத் காதர்- குறிச்சி.