சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம் (வயது57). இவர் கட்டிடப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரூபி. இருவரும் திருச்சியில் உள்ள உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு காரில் திருப்பத்தூர் திரும்பியுள்ளனர்.
அவர்களது கார், காரையூர் அருகே சோழம்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்புறம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி, விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கண்டவராயன்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சேதுராஜ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.