பொள்ளாச்சியில் கடந்த, மூன்று மாதத்தில் விபத்துகளில், 40 பேர் இறந்துள்ளனர். பைக்குகளை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டுவதால் விபத்துகள் நேரிடுவதாக, போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.பொள்ளாச்சி அருகே ஏழு வயது மகனை விபத்தில் பறி கொடுத்த தந்தை; வேகத்தடை கவனிக்காமல் வேகமாக சென்றதால் விபத்தில் உயிரிழப்பு; மூன்று பைக்குகள் மோதி, மூன்று பேர் இறப்பு என, தினமும் விபத்து செய்திகள் தொடர்கதையாக உள்ளது. ஆனால், இந்த விபத்துகளுக்கு காரணம், அதிவேகமும், அலட்சியமும் தான் என்பதை யாரும் உணர்வதில்லை,
அதிக விலை கொடுத்து, அதிக திறன் கொண்ட பைக்குகள் வாங்கி ஓட்டுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு, லைசென்ஸ் பெறும் வயது இல்லை என்பதே கொடுமையான விஷயம்.பயமறியா இளைஞர்கள் சிட்டாய் பறப்பதால், அவர்கள் மட்டுமின்றி, எதிரிலும், பின் தொடர்ந்தும் வரும் அனைத்து வாகனங்களும் விபத்துக்குள்ளாவது தினமும் அரங்கேறுகிறது.பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில், 32 லைசென்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் நடந்த, 34 விபத்துகளில், 40 பேர் இறந்துள்ளனர்; 114 உயிரிழிப்பு இல்லாத காயத்துடன் தப்பிய விபத்துகளும் நடந்துள்ளன.
பொள்ளாச்சி போன்ற சிறிய நகரில், மூன்று மாதத்தில், 40 பேர் இறப்பு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் பைக்குகளால் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தினமும் விபத்தில் சிக்கிய பைக்குகள் விசாரணைக்கு கொண்டு வரப்படுவது இதை உறுதிப் படுத்துகின்றன.
சமீபத்தில், பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் ஆறு பேர், மூன்று பைக்குகளில் வால்பாறை சென்றுள்ளனர். அவர்களை காணவில்லை என, பெற்றோர் தேடிய நிலையில், வால்பாறை சென்றது தெரிந்துள்ளது. ஆழியாறு வனத்துறை செக்போஸ்ட்டில், நுழைவு கட்டணம் மட்டும் வசூலிக்காமல், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தால், இதுபோன்ற அத்துமீறலை தடுக்க முடியும்.
வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது: அதிக திறன் கொண்ட பைக்குகளை வாங்குபவர்கள், ரோட்டில் ‘பறந்து’ செல்ல ஆசைப்படுகின்றனர். ரோடு திரும்பும் இடம், வேகத்தடை, குழிகள் என எதையும் கவனிக்காமல் வேகமாக செல்கின்றனர். மொபைல்போன் பேசியவாறும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும், இரவில் கண்கூசும் முகப்பு விளக்குகளை ஒளிர செய்வதும் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம்.இதன் விளைவு, விபத்தில் உயிரிழப்பு, காயமடைந்து முடமாவது தொடர்கதையாகிறது. வேகமாக செல்பவர்களால் மற்றவர்களும் பாதிக்கின்றனர் என்பதை உணரவில்லை. அதிலும், புதிய பைக் எடுத்துக்கொண்டு, வால்பாறை, ஆழியாறுக்கு செல்கின்றனர்.
வால்பாறை வளைவுகளில் எவ்வாறு சாலைகளை கடக்க வேண்டும் என்பது தெரியாமல், தாறுமாறாக அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளாகின்றனர்.ஹெல்மெட் அணிய வேண்டும், அதிவேகம் கூடாது என சாலைவிதிகளை மதிக்காமல் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. அதிலும், 18 – 30 வயது நபர்களால் விபத்துகள் ஏற்படுகிறது. பெரும்பாலானோர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுகின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விதிமுறை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ரோடுகளில் வேகமாக செல்வதை விட, விவேகமாக செல்ல வேண்டும். குழிகள் உள்ளதா, வேகத்தடை உள்ளதா என கவனிக்க வேண்டும். மற்றவர்களை முந்திச் செல்ல வேண்டுமானால், அதற்கான சூழல் உள்ளதா என்பதை கண்காணித்து, கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.