மேம்பால பணிக்காக மின் வழித்தடங்கள் மாற்றியமைப்பு! விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தகவல்!!

கோவை உக்கடம் பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக, அங்கிருந்த ஏழு உயர் மின் அழுத்த கோபுரங்கள் அகற்றப்பட்டு, ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் புதை மின் வடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளால் உக்கடத்தின் முகமே மாறுகிறது.கோவை-பொள்ளாச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், நகருக்குள் உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் இடையிலான பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. உக்கடம் முதல் கரும்புக்கடை வரை, ரூ.233 கோடியில், 1.46 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதியாக, கரும்புக்கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரை பாலம் நீட்டிக்கப்பட்டு, ரூ.265.44 கோடி மதிப்பில் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.முதல் பகுதியில், பேரூர் பை-பாஸில் இறங்கு தளமும், வாலாங்குளம் பை-பாஸ் ரோட்டில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பஸ்கள் வெளியேறுமிடத்தில், ஏறுதளமும் கட்ட வேண்டியுள்ளது. கேரளா பஸ்கள் நிற்குமிடத்திலுள்ள வணிக வளாகம் இடிக்கப்படவுள்ளது.

அதேபோன்று, பெரியகுளத்திலிருந்து வாலாங்குளம் ரோட்டில் துணை மின் நிலையம் வரை அமைந்துள்ள, உயர் மின் அழுத்த கோபுரங்களை இடம் மாற்றினால் மட்டுமே, பாலத்தை முழுமையாகக் கட்ட முடியும் என்ற நிலை உள்ளது.இந்தப் பணிகளை விரைவாகச் செய்து தருமாறு, மின் வாரியத்துக்கு முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் தாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாக, மின் வாரியத்தின் மேற்பார்வையில், இந்தப் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறையே மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே, இந்த பாலம் கட்டும் பணிக்காக, ரோட்டுக்கு நடுவிலும், ரோட்டின் ஓரங்களிலும் இருந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதை மின் வடமாக மாற்றப்பட்டுள்ளன. அதையடுத்து, உயர் மின் அழுத்த கோபுரங்களும் அகற்றப்படவுள்ளன.

இதில் பெரியகுளம் கரையிலிருந்து, துணை மின் நிலையம் வரையிலுமாகவுள்ள ஏழு உயர் மின் அழுத்த கோபுரங்களை (டவர்கள்) அகற்றி, புதை மின் வடம் பதிப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.பெரியகுளம் கரையை ஒட்டி ரோட்டின் சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள முதல் ‘டவர்’, பெரியகுளம் கரைக்கு மாற்றி அமைக்கப்படவுள்ளது. அதைத் தவிர்த்து, ஏழு ‘டவர்’கள் விரைவில் அகற்றப்படவுள்ளன.இப்பணிகளுக்காக 9 கோடியே 80 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் உயர் மின் அழுத்த கோபுரங்களை அகற்றி, புதை மின் வடம் அமைக்க மட்டுமே, ஏழரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மொத்தம் 600 மீட்டர் துாரத்துக்கு, 630 சதுர மீட்டர் பரப்பளவில் ஆறு உயர் மின் அழுத்த கம்பிகள், ‘டக்ட்’ போன்ற ஒரே கட்டமைப்பில் கொண்டு செல்லப்படவுள்ளன.இந்தப் பணிக்காக, வாலாங்குளம் ரோட்டில் குழிகள் தோண்டப்பட்டு, புதை மின் வடம் பதிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடையுமென்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp