தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மற்றும் SRM பல்கலைகழகம் இணைந்து நடத்திய
“சென்னை அக்ரி எக்ஸ்போ 2022”, ஜூன் 3,4,5, ஆகிய மூன்று நாட்கள் சென்னை காட்டாங்கொளத்தூரில் SRM பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விதை முதல் விற்பனை வரை என்ற திட்டத்தின் மூலம் ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அப்பளம் உற்பத்தியாளர் சங்கம் முதல் கட்டமாக மாதம் 500 டன் கருப்பு உளுந்தை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து விலை நிர்வாகத்துடன் கொள்முதல் செய்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள பல்வேறு அப்பள உற்பத்தி நிறுவனங்கள் தற்போது பர்மாவிலிருந்து கருப்பு உளுந்தை இறக்குமதி செய்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சம் டன் கருப்பு உளுந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி ஆகிறது.
இந்த கருப்பு நிற உளுந்தை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து தர ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முன்வந்தது.
இதன்படி, முதல் கட்டத்தில் கருப்பு உளுந்தை சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து உற்பத்தி செய்து தருவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அளவில் உழவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் SRM பல்கலை வேந்தர் பாரிவேந்தர் MP முன்னிலையில் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் P.R.பாண்டியன், தமிழ்நாடு தொழில் வணிகம் மற்றும் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் ரெத்தினவேல், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, APEDA தமிழ்நாடு செயலாளர் சோபனா, தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் J.K.முத்து, தமிழ்நாடு அப்பளம் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜி.திருமுருகன், சித்தமருத்துவர் சிவராமன்,
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் ஜி.ராஜமூர்த்தி, ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் அருண் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.