சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு சூறைக்காற்று வீசத்தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை சுமார் இரண்டு மணி நேரங்கள் பொழிந்தது.
கடுமையான சூறைக்காற்றின் காரணமாக அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வீடுகளின் கூரைகள், ஓடுகள், ஆஸ்பெட்டாஸ் கூரைகள் உள்ளிட்டவைகள் காற்றில் பறந்து நொறுங்கின. ஒரு ஓட்டு வீட்டின் மேல்பகுதியில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. வீட்டின் உள்ளே இருந்த மணிமாறன், பொன்னழகு ஆகியோர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியதால் உயிர் தப்பினர்.
ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. மேலும், கடுமையான சூரைக்காற்றின் காரணமாக அதே பகுதியில் சாந்தி, சாவித்திரி, லெட்சுமி உள்ளிட்டவர்களின் வீடுகள் ஓடு மொத்தம் 5 வீடுகளின் மேல் பகுதியில் வேயப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் கூரைகள் சரிந்து விழுந்தன.
அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான மரக்கிளைகள் முறிந்து விழுந்த நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த காரணத்தால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.