கோவை நகரில், திருச்சி ரோட்டில் செல்லும் பஸ்களுக்காக சிங்காநல்லுாரிலும், பொள்ளாச்சி ரோட்டில் செல்லும் பஸ்களுக்காக உக்கடத்திலும், அவினாசி ரோட்டில் செல்லும் பஸ்களுக்காக காந்திபுரத்திலும் தனித்தனியாக பஸ் ஸ்டாண்ட்கள் இயங்கி வருகின்றன.
மேட்டுப்பாளையம் ரோட்டில் செல்லும் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் கர்நாடகா மாநில பஸ்கள், காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மேட்டுப்பாளையம் ரோட்டில், சாய்பாபா கோவில் பகுதியில், 2006-2011 தி.மு.க., ஆட்சியில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டை, அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதிநவீனமாக அமைக்கப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டுக்கு, ஐ.எஸ்.ஓ., சான்றும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த புதிய பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து பஸ்களை இயக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் மறுத்தனர். அப்போதிருந்த கலெக்டர் உமாநாத், புது பஸ் ஸ்டாண்டிலிருந்தே மேட்டுப்பாளையம் பஸ்களை இயக்க வேண்டும்; அங்கிருந்து செல்வதற்குரிய கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டுமென்று உத்தரவிட்டார். இதை மறுபரிசீலனை செய்யுமாறு ஐகோர்ட்டை நாடினர். இருப்பினும் உமாநாத் அந்த உத்தரவை வாபஸ் பெற மறுத்து விட்டார். அதன்பின், அந்த உத்தரவுக்கு எதிராக தனியார் பஸ் உரிமையாளர்கள் தடையுத்தரவு பெற்றனர். காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்களை இயக்கலாம்; ஆனால் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளேயும் சென்று திரும்ப வேண்டும் என்று, ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அதை எந்த தனியார் பஸ்சும் மதிக்கவே இல்லை,
கர்நாடகா மற்றும் கேரள அரசு பஸ்கள், ஊட்டி செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் சில மட்டுமே, அங்கிருந்து இயக்கப்பட்டன.காந்திபுரம் பாலம் கட்டும்போது மட்டுமே, சில மாதங்களுக்கு இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டாலும், காந்திபுரத்திலிருந்து வாங்கும் கட்டணத்தையே தனியார் பஸ்களில் வாங்கினர். அர்ச்சனா பட்நாயக், ராஜாமணி ஆகியோர் கலெக்டராக இருந்தபோது, பெயருக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அதை நடைமுறைப்படுத்த, எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஸ்டாலின் திறந்து வைத்த பஸ் ஸ்டாண்ட் என்ற ஒரே காரணத்துக்காக, அ.தி.மு.க., ஆட்சியில்,இதை முற்றிலுமாக முடக்கி விட்டனர்.இதனால், மக்கள் வரிப்பணம் எட்டு கோடி ரூபாய் செலவழித்துக் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சிக்கு ஒரு பைசா வருவாயை ஏற்படுத்திக் கொடுக்காமல் வீணாகி வருகிறது.
இதே இடத்தில், இதே தொகைக்கு வணிக வளாகத்தைக் கட்டியிருந்தால், இந்த 12 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் இப்போது எதற்குமே பயனின்றிக் கிடக்கிறது.துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது, திறந்து வைக்கப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டை, அவரே முதல்வராக இருக்கும் நிலையில், இப்போதாவது முழுமையாக செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் அந்த இடத்தை வீணாக்காமல், வணிக வளாகமாகவோ, மார்க்கெட் ஆகவோ மாற்றுவதற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.