கோவை : மழைநீர் வடிகாலில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட கோவை போலீஸ் தலைமை காவலரின் பணி பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. கோவையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் ரயில்வே மேம்பாலம் லங்கா கார்னர் சந்திப்பில் மழைநீர் தேங்கும். இந்த இடத்தில் மழைநீர் வடிந்து செல்வதற்கு வசதியாக, இரும்பு கிரில் கொண்டு வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரில் வடிகாலில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் காகிதங்கள் அடைத்துக் கொண்டு நின்றன. இதனால் மழைநீர் வடிகாலில் இறங்காத நிலை ஏற்பட்டது. இதைக்கண்டதும், ரோந்து பணியில் இருந்த போலீஸ் தலைமை காவலர் வெங்கடேஷ் உடனடியாக ஷூக்களை கழற்றி விட்டு சாலையில் இறங்கினார். வடிகாலில் அடைத்திருந்த பிளாஸ்டிக் குப்பையை அகற்றி, மழைநீர் வடிந்து செல்வதற்கு வழி ஏற்படுத்திய பிறகே அங்கிருந்து சென்றார். அவரது பணியை கண்ட பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
சின்ன தடாகத்தை சேர்ந்த தலைமை காவலர் வெங்கடேஷ், 19 ஆண்டுக்கு முன் போலீஸ் பணியில் சேர்ந்தார். ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் ரோந்துக்குழுவில் பணியாற்றி வருகிறார்.
காவல்துறை என்றாலே லஞ்சம் ஊழல் என பேசிக் கொண்டிருப்பவர்கள் இப்படியும் காவல்துறையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.