கோவை பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.3 கோடி மோசடி!!

கோவை பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.3 கோடி மோசடி! கிழிந்த நோட்டுக்களை வைத்து ரூ. 3 கோடி மோசடி! வங்கி ஊழியர்கள் 5 பேர் சி.பி.ஐ வழக்குப்பதிவு!

கோவையில் செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் நஞ்சப்பா சாலை கிளையின் துணை பொது மேலாளரும், கோவை மண்டல தலைவருமான கிரிஷ்டகௌடா கடகால் டெல்லி சி.பி.ஐ வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அதில் ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தங்கள் வங்கியில் இருந்து 70 கோடியே 40 லட்சம் ரூபாய் பணம் அனுப்பியதாகவும், அந்த தொகையை ரிசர்வ் வங்கியில் வரிசைப்படுத்தும் போது, ​அனுப்பிய நோட்டுகளை ஆய்வு செய்ததில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முரண்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி மூலம் விரிவான கடிதம் தங்களுக்கு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கோவையில் உள்ள தங்கள் வங்கியில் ரிசர்வ் வங்கி அலுவலர்கள் தணிக்கை மேற்கொண்டதில் பல போலி மற்றும் சிதைக்கப்பட்ட நோட்டுகளை அவர்கள் கண்டறிந்ததாகவும் தெரிவித்த அவர், ரிசர்வ் வங்கி அலுவலர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வங்கி அலுவலர்கள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி, சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை நடைபெற்ற நாட்களை கணக்கெடுத்து அந்நாளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 28.02.2021 மற்றும் 18.12.2021 ஆகிய நாட்களின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் தங்கள் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களே வங்கி கருவூலத்தில் இருந்து பணத்தை எடுத்து அதற்கு பதிலாக போலி மற்றும் சிதைக்கப்பட்ட நோட்டுகளை மாற்றி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி கருவூலத்திற்குச் செல்ல அங்கீகாரம் உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு மோசடி தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதில் வங்கி கருவூல அலுவலர்களான செல்வராஜன், ஸ்ரீகாந்த், ராஜன், ஜெய சங்கரன் மற்றும் வாங்கியின் பாதுகாவலர் கனகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத சில அரசு அதிகாரிகள் கூட்டு சதி செய்து, வங்கி கருவூலத்தில் இருந்த பணத்தை கையாடல் செய்து அதற்கு பதிலாக போலி மற்றும் சிதைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் வங்கிக்கு எதிராக செயல்பட்டு சுமார் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்து மோசடி செய்துள்ளதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இப்புகார் தொடர்பான விசாரணை சென்னை சி.பி.ஐ வங்கி மோசடி தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் புகாரில் அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மோசடியில் சம்மந்தப்பட்ட வங்கி அலுவலர்கள் செல்வராஜன், ராஜன், ஜெய சங்கரன், ஸ்ரீகாந்த், பாதுகாவலர் கனகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

-Ln. இந்திராதேவி முருகேசன் / சோலை. ஜெய்க்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp