சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் பிரான்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரோஜா (24). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக புழுதிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எஸ்.புதூரிலிருந்து வந்த 108 வாகனத்தை ஓட்டுநர் பிரபு மற்றும் மருத்துவ உதவியாளர் மணி ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர். பிரான்பட்டியிலிருந்து புழுதிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில், ரோஜாவிற்கு வலி அதிகமானதால்108 வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளர் மணி, ரோஜாவுக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு ஓட்டுநர் பிரபு உதவிகள் புரிந்தார்.
இந்நிலையில் ரோஜாவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதன்பின்பு ரோஜாவை புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய் மற்றும் இரட்டைக் குழந்தைகளை காப்பாற்றிய 108 வாகன ஓட்டுனர் பிரபு மற்றும் மருத்துவ உதவியாளர் மணி ஆகியோரை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
– பாரூக், சிவகங்கை.