தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டி.என்.பி.எஸ்.சி, TNPSC குரூப் 4 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் இத்தேர்வை எழுதி வருகின்றனர். தமிழக அரசு துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வையாணமான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் – 4 தேர்வுகள் இன்று நடைபெற்று வருகிறது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற்று வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு காலை 9.30 மணிக்கு துவங்கியது. இத்தேர்வுகள் பகல் 12.30 மணிக்கு முடிவடையும். 10ஆம் வகுப்பு தரத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெறும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம்பெறும்.
பொது அறிவு பிரிவில் 75 திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெறும்.குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவார்கள். தேர்வர்கள் விடை குறிக்கவேண்டிய OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும்.
தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும். இடதுகை பெருவிரல் ரேகையை OMR தாளில் தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும். முறைகேடுகளைத் தவிர்க்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வு எழுத செல்லும் தேர்வர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவையில் கற்பகம் கல்லூரியில் டி.என்.பி.எஸ்.சி, குரூப் 4 தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆங்காங்கே கூட்டமாக நிற்கும் காரணத்தினால் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தலைமையில் துணை ஆய்வாளர் குப்புராஜ் மற்றும் காவல் துறையினர் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
-இளம் தந்தி.