நுாலகங்களில் வாசகர்கள் படிப்பதற்காக எடுத்துச்செல்லும் புத்தகங்களை திரும்ப அளிக்க, காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான அபராத தொகை வாரத்திற்கு, 50 பைசா என்ற நடைமுறை தற்போது வரை பின்பற்றப்படுவதால், நல்ல புத்தகங்கள் காணாமல் போகும் சூழல் தொடர்கிறது. 50 பைசா என்பது தற்போது புழக்கத்திலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில், மாவட்ட மைய நுாலகங்கள் தவிர, ஆயிரத்து 923 கிளை நுாலகங்கள், ஆயிரத்து 915 ஊர்ப்புற நுாலகங்கள், 751 பகுதிநேர நுாலகங்கள், 14 நடமாடும் நுாலகங்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 640 நுாலகங்கள், பொது நுாலக இயக்ககத்தின் கீழ் செயல்படுகிறது.
இங்கு, பொதுமக்கள் அமர்ந்து படிக்க வசதி செய்யப்பட்டுள்ளதோடு, உறுப்பினராக இணைந்தால், புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்றும் வாசிக்கலாம்.நுாலகங்களுக்கு வயது முதிர்ந்த பெரியவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலை தேடுவோர், அரசு பணிக்கு முயற்சிப்பவர்கள் என பலர் வருகின்றனர். போட்டி தேர்வு எழுதுவோருக்கு நுாலகங்கள் பெரும் பொக்கிஷமாக உள்ளன. நுாலகங்களில் புத்தகங்களுக்கான காப்பு தொகை மற்றும் அபராத தொகை மிகக் குறைவாக உள்ளது.
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள கிளை நுாலகங்களில் காப்புத்தொகை ஒரு புத்தகத்திற்கு, 15 ரூபாயும், இரண்டுக்கு 25 ரூபாயும், மூன்று புத்தகங்களுக்கு 30 ரூபாயும், இத்துடன் ஆண்டு சந்தா ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான புத்தகங்களின் சராசரி விலை, 150 ரூபாயாக உள்ளது, இந்நிலையில் ஒரு புத்தகத்திற்கான காப்புத்தொகை வெறும் பத்து ரூபாய் என நிர்ணயித்திருப்பது மிகவும் குறைவு. இத்துடன் புத்தகத்தை படிக்க வீட்டிற்கு எடுத்துச் செல்வோர், 15 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்.
அதற்கு பிறகு தாமதமாகும் ஒவ்வொரு வாரத்திற்கும், 50 பைசா அபராதம் வசூலிக்கப்படுகிறது. புத்தகம் தொலைந்து விட்டது என்று கூறினால், அரசு நிர்ணயித்துள்ள புத்தகத்தின் விலையுடன் தாமதமான ஒரு வாரத்திற்கு 50 பைசா வீதம் வசூலிக்கின்றனர். அபராதம் குறைவு என்பதால் பல புத்தகங்கள் தொலைந்து போனதாக வேண்டுமென்றே கூறி பணத்தை செலுத்தி புத்தகத்தை சொந்தமாக்கிவிடுகின்றனர். அரிய வகை புத்தகங்கள் தொலைந்து விட்டதாக கூறினால் அதற்கு ஐந்து அல்லது பத்து மடங்கு கட்டணம் வசூலித்தால் மட்டுமே நுாலகங்களில் தொடர்ந்து வாசகர்களுடைய வாசிப்புக்கு வைத்திருக்க முடியும்.
இதுகுறித்து கிளை நுாலகர் ஒருவர் கூறுகையில், ‘புத்தகங்களை எடுத்துச்செல்லும் வாசகர் இருப்பிடம் மாறினால், கடிதம் அனுப்புதல், நோட்டீஸ் அனுப்புதல் என்ற பழைய முறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் புத்தகத்தின் பொறுப்பை நுாலகர்கள் ஏற்று பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. காப்புத்தொகை, அபராதம் ஆண்டுக்கணக்கில் மாற்றாமல் அப்படியே உள்ளது. இதனை மாற்றினால் மட்டுமே, புத்தகங்கள் தொலைந்து போவதை தவிர்க்க முடியும். வாசகர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்,’ என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.