பிரபல நகைக் கடையில் பரபரப்பு! லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என கூறி நகை சுருட்ட முயன்ற பெண்கள் கைது!!

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலையம் எதிரே பிரபல நகை கடை உள்ளது. இந்தக் கடையில், டிப் டாப்பாக ஆடை அணிந்து வந்த 2 பெண்கள், கடைக்குள் சென்று நகைகளை வாங்குவதுபோல் பார்த்தனர். சுமார் 10 பவுன் நகை வரை தேர்வு செய்த பின்னர், அங்கிருந்த ஊழியர்களிடம் உங்களது கடை முதலாளி எங்கே என்றும், அவரை உடனே வரச் சொல்லுங்கள் என்றும் கட்டளையிட்டனர். அதற்கு ஊழியர், என்ன காரணம் என்று எங்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கவே, உடனடியாக அருகில் இருந்த மேனேஜரும், என்ன விவரம் எங்களிடம் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.

உடனே அந்த இரண்டு பெண்களும், நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறியதோடு, தங்களிடமிருந்த ஐடி கார்டையும் காட்டியுள்ளனர். மேலும், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு மீதி நகையை இலவசமாக தர வேண்டும் என்று கடை ஊழியர்களை மிரட்டியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள், அவர்கள் இருவரையும் அமர வைத்து விட்டு, கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளனர். பின்னர் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார், நகை கடைக்கு விரைந்து சென்று 2 பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த 2 பெண்களும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரின் மனைவி பாபி என்ற ராஜலட்சுமி என்பதும், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெரியகடை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பரமேஸ்வரி என்றும் தெரியவந்தது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று ஏமாற்றி, நகையை வாங்க முயன்றதும் அம்பலமானது.

இதையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், இவர்கள் தமிழகம் முழுதும் பல்வேறு நகை கடையில் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp