மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் பொள்ளாச்சி, வால்பாறை ரோடுகளில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் கவனமாக செயல்பட்டு விபத்துகளை தவிர்க்க வேண்டும் என வட்டார போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோரில், இளைஞர்கள் பலர், சாலையில் வாகனத்தின் வேகத்தை அதிகரித்து சாகசத்தில் ஈடுபடுகின்றனர். அதிலும், புதியதாக வாகனங்கள் வாங்கினால், உடனே, பொள்ளாச்சி – வால்பாறை ரோட்டில் செல்வது தான் வாகன ஓட்டுனர்களின் விருப்பமாக உள்ளது.
அதிகதிறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், வால்பாறை செல்வோர், எதை பற்றியும் கவலை கொள்ளாமல் வேகமாக செல்வதை காண முடியும். வால்பாறை ரோடு மட்டுமின்றி, மற்ற ரோடுகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிலர் ‘ஸ்டைல்’ என்ற பெயரில் வாகனத்தை வளைத்து, வளைத்து வேகமாக ஓட்டி மற்றவர்களை அச்சப்படுத்தி, கவனத்தை சிதைத்து விபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது. தற்போது பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்யும் சூழலில், வேகத்தை விட விவேகமாக செல்வதே நிம்மதி தரும் என்பதை வாகன ஓட்டுனர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பொள்ளாச்சி – வால்பாறை ரோட்டில் வாகன ஓட்டுனர்கள், வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த ரோட்டில் தற்போது மழைப்பொழிவு உள்ளதால் வேகமாக செல்லும் போது, ரோட்டில், ‘கிரிப்’ கிடைக்காமல் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கற்கள் விழும் பகுதிகள் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை கடக்கும் போது வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியமாகும். மலைப்பாதையில் சில இடங்களில், சமீபத்தில் பாறை கற்கள் உருண்டு விழுந்து கிடக்கின்றன.எனவே, வால்பாறை செல்லும் வாகன ஓட்டுனர்கள் முக்கியமாக, இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், அதிவேகத்தை குறைத்து, அவர்களது பாதுகாப்பு மற்றும் எதிரே வருபவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி ரோடுகளில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது. ஒரு சில இடங்களில் மழையால் ரோடுகள் பெயர்ந்து குழிகளாக காணப்படுகின்றன. கவனமின்றி செல்வோர், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.மழைப் பொழிவு அதிகமாக உள்ள நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் பார்வைக்கு தெரியாது. பனிப்பொழிவுடன் கூடிய மழையால், முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லலாம். எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு, விவேகமாக பயணிப்பது நிம்மதி தரும்.மழை பெய்யும் தருணத்தில், தரமற்ற, உருக்குலைந்த ரோடுகளில், மற்ற வாகனங்களை அதிவேகமாக முந்திச் செல்ல வேண்டும் என நினைப்பது விபத்தில் முடியும்.
வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது: “மற்ற நாட்களை விட மழைக் காலத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விபத்துக்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வுடன் பயணிப்பதே சிறந்தது. வாகன ஓட்டுனர்கள், மழைக்காலத்தில் வேகமாக செல்ல வேண்டும் என நினைக்க வேண்டாம். மழைப் பொழிவு அதிகமாக இருந்தால், வாகனத்தை ஓரமாக நிறுத்தி மழை இடைவெளி விட்டதும் பயணிக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் ‘ரேஸ்’ செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மழைக்காலங்களில் மிதவேகம் மிக நன்று. எதிரே வரும் வாகனங்களை கவனிப்பது போன்று, ரோட்டில் குழிகள் உள்ளதா என கவனித்து வாகனம் ஓட்டுவது முக்கியமானது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.