கோவையில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நாய் கடிக்கு, 4,400க்கும் மேற்பட்டோர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது மாநகராட்சி நிர்வாகம்.கோவையில் தெரு நாய்கள் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரம் பணி முடிந்து வரும், ஆண்கள், பெண்களுக்கு இவை மிகுந்த தொந்தரவை தருகின்றன.
வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி செல்வதால், பதற்றத்தில் நிலைதடுமாறி, வாகனங்களிலிருந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் காயங்களும், பொருளாதார இழப்புகளும் தனி. குறிப்பாக, உக்கடம், புல்லுக்காடு, ஜெயம்நகர், கரும்புகடை, பீளமேடு, காளப்பட்டி, நேருநகர், வேலாண்டிபாளையம், சின்னண்ணன் செட்டியார் வீதி என, மாநகரில் பல்வேறு இடங்களில் இப்பிரச்னை, தொடர் கதையாக உள்ளது.அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் 4,400க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு, சிகிச்சை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
2014ம் ஆண்டு கோவையில் செயல்படுத்தப்பட்ட ‘இடைவிடா கருத்தடை’ திட்டத்தில், 30 மாதத்தில், சுமார், 20 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. சில சிக்கல்களால் திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது, கோவை மாநகராட்சியில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன. இனி எவ்வளவு ஊசி தேவையோ!
இது குறித்து, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், ”கோவை அரசு மருத்துவமனைக்கு நாய் கடியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற வரும் நபர்களுக்கு, முதலில் ‘டி.டி’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து, நாய் கடிக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பின்னர், 1, 3, 7, 14, 30 நாட்கள் கால இடைவெளியில் ஊசி செலுத்தப்படும். கடந்த ஜன முதல் ஜூன் வரை, 13 ஆயிரத்து 153 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.