எல்லை பிரச்சினையால் காயம் அடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க தாமதம்! சூழலியல் ஆர்வலர்கள் அதிருப்தி!!

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைப் பகுதியில் ஆனைகட்டி பகுதி அமைந்துள்ளது. சுமார் 70 சதவீத வனப்பகுதி கொண்ட இந்த ஆனைகட்டி பகுதியில் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக காட்டு யானைகளின் வலசைப் பாதையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆனைகட்டி பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். அது மட்டுமல்லாமல் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வருவதும் வழக்கம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனைகட்டி அருகே உள்ள பட்ட சாலை பகுதியில் தமிழக – கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் நின்று கொண்டிருந்தது. அந்த யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளதால் உணவு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் யானை தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலையில் இருந்து இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருந்துள்ளது. ஆனால் அதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் இடையே குழப்பம் நீடித்து வந்தது. இது ஒரு புறம் இருக்க கேரளா வன பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரளா வனத்துறையும், தமிழக வனப் பகுதிக்குள் யானை வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நின்று இருந்தனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதே சமயம் அந்த காட்டு யானையும் பயத்துடன் எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தது. மேலும் ஆற்றின் நடுவே நின்று கொண்டிருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு உடனடியாக தமிழக வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் எனவும் கேரள வனத் துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் யானையை காப்பாற்ற தமிழக வனத்துறையினர் முன் வர வேண்டும். யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் இழுத்தடிப்பு செய்து வருவது முறையல்ல. காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் தகவல் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக காவல் துறையில் எல்லைப் பிரச்சனை காரணமாக வழக்குகளை யார் விசாரிப்பது என்பதில் குழப்பம் இருந்து வரும் நிலையில், வனத்துறையிலும் எல்லை பிரச்சனையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக கேரளா வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறையினர் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கொடுங்கரை ஆற்றுப் பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்த போது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றிருப்பது தெரியவந்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனைத் தொடர்ந்து அந்த யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறிய ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிக்கமுதியில் இருந்து முதற்கட்டமாக கும்கி யானை கலீம் ஆனைகட்டி கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து யானையின் இருப்பிடம் தமிழ்நாடு பகுதிக்குள் இருந்தால் கோவை வனத்துறையினரும், கேரளாவிற்குள் இருந்தால் அம்மாநில வனத்துறையினரும் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர். ட்ரோன் மூலம் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்து பின்னர் கும்கி யானை உதவியுடன் உடல் நலம் இல்லாமல் இருக்கும் யானைக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தற்போது சுமார் 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp