தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை என ஆன்லைன் மூலமாக பொய் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். அந்தக் கவர்ச்சி விளம்பரங்களை பார்த்து ஏராளமானோர் வேலைக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்த அனைவரையும் வரவழைத்து நேர்காணல் தேர்வை நடத்தி நாடகமாடியுள்ளனர். அத்துடன் நேர்காணல் வந்தவர்களுக்கு பணி நியமன கடிதத்தையும் போலியாக கொடுத்து, பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக சொல்லி விரைவில் சம்பளம் வரும் என்றும் கூறியுள்ளனர்.
சம்பளம் பெறும் முன்னர், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்பதால் அனைவரிடமும் ஒரு தொகையை பெற்றுக் கொள்வது வழக்கமாம். அப்படி பணத்தை வசூல் செய்த பின்னர், சதுரங்க வேட்டை பட பாணியில் அந்த சிம் கார்டை வீசி எறிந்து விடுவார்கள். அடுத்த விளம்பரம் ஆன்லைனில் கொடுக்கும் போது புதிதாக ஒரு சிம் கார்டை வாங்கி விடுவார்கள்.
தமிழ்நாடு மட்டும் அல்லாமல் மும்பை, மலேசியா என பல இடங்களில் வேலைக்கான நேர்காணல் நடத்தி சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் 16 பேர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது நாகர்கோவில் அருகே திட்டுவிளையை சேர்ந்த பிரின்ஸ் சாரோன் ( வயது 30 ) என்பதும் தெரியவந்தது.
அப்போது அவரிடம் இருந்த 100க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளையும், அவருடைய லேப்டாப்பையும் பறிமுதல் செய்தனர். மும்பை போலீசார் கைது செய்யப்பட்ட பிரின்ஸ் சாரோன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பின்னர் அவரை போலீசார் மும்பைக்கு அழைத்து சென்றனர். பிடிபட்ட ஒருவரிடம் மட்டுமே நூறு சிம்கார்டுகள் இருந்தது என்றால் எத்தனை முறை இந்த சம்பவங்களை செய்திருப்பார்கள்.. எதனை பேரை ஏமாற்றி இருப்பார்கள்.. மொத்தம் மோசடி செய்த பணம் எவ்வளவு என்பது போலீசாரின் விசாரணை முடிவில்தான் தெரிய வரும்.
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.