நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் 3ம் தேதி வரை, இரண்டு நாட்கள் வல்வில் ஓரி விழா அரசின் சார்பில் நடக்கிறது. இதற்காக அரங்கம் அமைப்பு உள்ளிட்ட பணிகளை, நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:
“வல்வில் ஓரி விழாவையொட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணிவிளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா நடக்கிறது. கொல்லிமலைக்கு வருபவர்களிடம் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு இடங்களில் வனத்துறை மற்றும் போலீசாரால் வாகனங்கள் சோதனையிடப்படும். ஆய்வில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரிந்தால், பறிமுதல் செய்யப்படும். சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை கொல்லிமலைக்கு கொண்டுவர வேண்டாம்.
சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரிக்க, ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. கடைகளில் ஒருமுறை பயன்டுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கொல்லிமலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்ததால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகவே ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்லவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லிமலைக்கு பைக்குகளில் வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக (தலைகவசம்) ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது எம்.எல்.ஏ., பொன்னுசாமி, டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன், ஆர்.டி.ஓ., மஞ்சுளா, வனசரகர் சுப்பராயன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ரஞ்சித் குமார், திருச்செங்கோடு .