கோவை அரசு கல்லுாரியில் சேர்ந்து படிக்க, மாணவ மாணவியர் போட்டி போடுகின்றனர். மொத்தமுள்ள 1,437 இடங்களில் சேர, 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதன் வாயிலாக, மாநில அளவில் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ள கல்லுாரிகளில், சென்னை மாநில கல்லுாரிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை, கோவை அரசு கல்லுாரி பிடித்துள்ளது.
தமிழகத்தில், 163 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப்படிப்புகளில், 1.2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த, ஜூன், 29 முதல், ஜூலை, 27 வரை நடந்தது. மொத்தம், நான்கு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை அரசு கலைக் கல்லுாரியில், 25 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
கல்லுாரி துவங்கி, 120 ஆண்டுகளில் முதல் முறையாக, 25 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் சென்னையில் உள்ள மாநிலக் கல்லுாரிக்கு அடுத்தபடியாக, கோவை அரசு கலை கல்லுாரி அதிக விண்ணப்பங்களை பெற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை அரசு கலைக் கல்லுாரியில் வரும், 5ம் தேதி முதல் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி கூறுகையில், ”நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்காக மொத்தமுள்ள, 1,437 இடங்களுக்கு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும், 5ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. முதற்கட்டமாக, மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு, ராணுவத்தினரின் குழந்தைகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.