நமது நாட்டை ஆக்கிரமித்த ஆங்கிலேய காலனியாதிக்க சக்திகள் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து, மக்களை அடிமைகளாக்கி, மக்களின் உரிமைகளை நசுக்கினர். அந்த அடிமைத்தளையிலிருந்து நமது நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுக்க சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைத் தாண்டி தன்னலமற்ற மக்கள் அனைவரும் அகிம்சை போராட்டத்தில் ஒன்றிணைந்து அதன் மூலம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள். பல்வேறுபட்ட இனம், மொழி, மதம், கலாச்சாரம் கொண்டுள்ள இந்தியாவை மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக கட்டமைத்தனர் நமது முன்னோர்.
பல உயிர் தியாகங்கள் செய்து, பல்வேறு போராட்டங்களின் விளைவாக கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுவிழாவையொட்டி நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், சுதந்திரத்திற்காக சொல்லெனாத் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து இன்னுயிர் நீத்த பல சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறுகளை காட்சிப்படுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு “இந்திய மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஜனவரி 26 முதல் ஆகஸ்ட் 15 வரை முன்னெடுத்து, மக்கள் சங்கமம் மாநாடுகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மக்கள் சங்கமம் மாநாடு இருதினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. காலை நிகழ்வில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களது பங்களிப்பையும், தியாகங்களையும் காட்சிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட்டது.
மாலை நடந்த பொதுக்கூட்ட நிகழ்விற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்டச்செயலாளர் இஸ்ஹாக் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் நாகூர் மீரான், SDPI கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பேச்சாளர் அகமது இத்ரீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்டச் தலைவர் முகமது அபுதாஹிர், சிவகங்கை மாவட்டச் செயலாளர் அப்பாஸ் அலி, SDPI மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கமால் பாட்ஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை கிழக்கு பகுதி தலைவர் சிக்கந்தர், செயலாளர் அமீர் அப்பாஸ், சிங்கம்புணரி பகுதித்தலைவர் முகமது ஆரீப், செயலாளர் அன்வர்தீன், மேலூர் பகுதித் தலைவர் அப்துல் ஹமீத் ரிஃபாயி, மேலூர் பகுதி செயலாளர் ஆஷிக், SDPI தொகுதி தலைவர் முகமது தாஹா, சொக்கலிங்கபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் மெஹராஜ் பீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக அப்துல் வஹாப் நன்றியுரையாற்றினார்.
கண்காட்சி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.