ஊர் ஊராக சென்று திருடி சம்பாதித்த பணத்தில், வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மூவரை, கோவை போலீசார் கைது செய்தனர்.கோவை தெலுங்குபாளையம் அடுத்த தாமு நகரை சேர்ந்தவர் ராமு, 54. இவரது மனைவி நாகம்மாள், 52. இந்த தம்பதியின் மகன் சத்யா, 34. மதுரையை சொந்த ஊராக கொண்ட இந்த குடும்பத்தினர், கோவையில் 15 ஆண்டுக்கு முன் செட்டில் ஆகியுள்ளனர். ஊர் ஊராக சென்று, நகை திருடுவதுதான், இந்த குடும்பத்தினரின் வேலை.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாகம்மாள் பஸ்சில் ஏறி, உடன் பயணிக்கும் பெண்களிடம் நகை திருடிவிட்டு, அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விடுவார். அவரை பின் தொடர்ந்து, காரில் செல்லும் கணவர் ராமு, மகன் சத்யா ஆகியோர், நகை திருடி வரும் நாகம்மாளை, ‘பிக்அப்’ செய்து கொள்வர்.
இதே வேலையை, பல ஆண்டுகளாக இந்த கும்பல் வாடிக்கையாக செய்து வந்துள்ளது. கோவையில் இரு வேறு இடங்களில், பஸ்சில் பயணித்த பெண்களிடம் நகை திருடிய சம்பவத்தில், நாகம்மாள் கும்பலுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ராமசெட்டி பாளையத்தை சேர்ந்த அன்னம்மாள், 55, கோனியம்மன் கோவில் தேரோட்டம் பார்க்க பஸ்சில் வந்தபோது, அவரது 5 பவுன் நகையை நாகம்மாள் திருடி தப்பி விட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், நாகம்மாளை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கணவர் ராமு, மகன் சத்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூவரும் நகை திருடி சம்பாதிக்கும் பணத்தை, உல்லாசமாக செலவழித்துள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், துபாய்க்கு சுற்றுலா சென்று வந்துள்ளதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் மீது, வேறு ஏதாவது ஸ்டேஷன்களில் வழக்கு நிலுவையில் உள்ளதா என்று, போலீசார் விசாரிக்கின்றனர். இவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருடிச் சேர்த்த பணத்தை கொண்டு காந்திபுரம் பாரதியார் வீதியில், சொந்த வீடு வாங்கி வாடகைக்கு விட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சத்யாவின் மனைவி, கேரளாவில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.