நெல்லையில் உள்ள கசாலி ஓட்டலில் தந்தூரி சிக்கனுக்கு சைடிஸ் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளர்கள் 2 பேரை சரமாரியாக தாக்கிய 8 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தந்தூரி சிக்கனுக்கு சைடிஸ் கேட்டு தகராறு நெல்லை தச்சநல்லூர் ஊருடையார்புரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய நண்பர் மணிகண்டனுடன் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்.
அப்போது அவர்கள், தந்தூரி சிக்கனுக்கு சைடிஸ் தருமாறு ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால், சைடிஸ் காலியாகி விட்டதாக ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதற்கான தொகையை கழித்து தருவதாக சிவபெருமாள், மணிகண்டன் ஆகியோர் கூறினர். இதனால் அவர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சரமாரி தாக்குதல் இதில் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கையாலும், கம்பாலும் சிவபெருமாள், மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக தாக்கி, சாதி பெயரை கூறி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவபெருமாள் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 8 ஊழியர்கள் கைது இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களான மேலப்பாளையம் நேரு நகரைச் சேர்ந்த சையத் பஷீர் (32), மேலப்பாளையம் மேத்தமார்பாளையத்தைச் சேர்ந்த முகம்மது தாசிம் கனி (26), அக்பர் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் (28),
மேலப்பாளையம் தெற்கு முகைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (53), மேலப்பாளையம் பங்கலப்பா நகரைச் சேர்ந்த சதாம் உசேன் பாதுஷா (32), சுத்தமல்லியைச் சேர்ந்த சரவணன் (49), மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்த ரமீஸ் ராஜா (32), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிராஜூதீன் பீக் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழாத வகையில், ஓட்டல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஓட்டலில் நடந்த தகராறு குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
-அன்சாரி, நெல்லை.