சிறுவர்கள் வாகனங்களில் சென்று விபத்து ஏற்படுத்தினால், பெற்றோருக்கு சிறை தண்டனை அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வந்த பிறகும், கோவையில் பள்ளிகளுக்கு மாணவர்கள் பைக் ஓட்டிச்செல்வது அதிகரித்து வருகிறது. 18 வயது நிரம்பாத, லைசென்ஸ் இல்லாத மாணவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். தவறு என தெரிந்தும், சட்டத்தை மதிக்காமல், சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கோவை மாநகர பகுதியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள், பள்ளி சீருடையுடன் சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டிச் செல்வதை தினந்தோறும் காண முடிகிறது. மேலும், பள்ளிக்கு பைக் எடுத்துச் செல்ல பெரும்பாலான பெற்றோரும் அனுமதிக்கின்றனர். மாணவர்கள் வரும் பைக்கை, பள்ளி வளாகத்தில் நிறுத்த நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை. அதையும் மீறி பைக்கில் வரும் மாணவர்கள், பள்ளி வளாகத்துக்கு வெளியே நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இதை பள்ளி நிர்வாகம் கண்காணித்து, மாணவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கின்றனர். ஆனாலும், பைக்கில் பள்ளிக்கு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து, பைக் ஓட்டும் மாணவர்களின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், இதற்கு தீர்வு காண முடியும்.
வக்கீல்கள் கூறியதாவது: “சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், மோட்டார் வாகன சட்டப்பிரிவு, 180-ன் படி, 1,000 ரூபாய், ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்துக்கு, சட்டப்பிரிவு 181-ன் கீழ் 500 ரூபாய் என மொத்தம் 1,500 ரூபாய் வரை மட்டுமே பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிறுவர்கள் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதை தடுக்க, 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினாலோ அல்லது விபத்து ஏற்படுத்தினாலோ, பெற்றோருக்கு தண்டனை அளிக்கும் வகையில், 2019ல், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199-ன் படி, வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், பெற்றோருக்கு, 25,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். விபத்தை ஏற்படுத்திய சிறார், தனது, 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற முடியாது. இச்சட்டம் அமலுக்கு வந்த பின், கோவை உட்பட பல்வேறு கோர்ட்டுகளில், சிறுவன் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், பெற்றோருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டிச் செல்வதை பார்க்கும்போது, வேதனையாக இருக்கிறது. விபத்து ஏற்படும் முன், போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு, வக்கீல்கள் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.