கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாக செல்லும் பாலத்தை கடக்க முயன்ற விவசாயியை வெள்ளம் அடித்துச் சென்றது. கோயம்புத்தூர் வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆழியார் அணையிலிருந்து நேற்று (ஆக. 04) 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் அம்பராம்பாளையம் ஆறு, பொள்ளாச்சி ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வருகிறது. மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாக செல்லும் பாலத்தில் அதிகமாக பாலம் மூழ்க்கும்படி நீர் செல்கிறது. பாலத்தை கடக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்கும்படி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை திடீரென வெள்ளம் அடித்துச்சென்றது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இந்த நிலையில் அடித்து செல்லப்பட்ட நபரின் உடல் பூச்சனாரியில் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில் அவர் காளியப்ப கவுண்டன்புதூரை சேர்ந்த விவசாயி சந்திரசாமி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பாலத்தை கடக்கும் போது கவனமாக செல்லுமாறு காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.