மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருத்தப்புலியன்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரது மனைவி மாலதி. இவரது பெயரில் ₹.15 லட்சம் மதிப்பிலான சொத்து உள்ளது. இதற்கான சொத்து மதிப்பு சான்றிதழ் கோரி, மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இச்சான்றிதழை வழங்க, மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிட துணை வட்டாட்சியராகப் பணிபுரியும் மணிகண்டன்(46) என்பவர் அதற்கு ₹20 ஆயிரம் கையூட்டாகக் கேட்டுள்ளார். கையூட்டு தர விரும்பாத பிரபு, மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகாரளித்தார். இதனையடுத்து ரசாயனம் தடயவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை துறை காவலர்கள் அவரிடம் கொடுத்தனுப்பினர்.
மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற பிரபு, துணை வட்டாட்சியர் மணிகண்டனிடம் பணத்தை கொடுக்க முற்பட்ட போது அவர், தனது இடைதரகரான மூக்கனிடம் அந்தத் தொகையை வழங்குமாறு கூறியுள்ளார்.
இதன்படி, அருகில் நின்றிருந்த மூக்கனிடம் ₹20 ஆயிரத்தை கொடுத்தபோது, அருகில் மறைந்திருந்த மதுரை லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
துணைக் கண்காணிப்பாளர் சத்யசீலன் மற்றும் ஆய்வாளர் ரமேஷ்பிரபு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்பு மணிகண்டன் மற்றும் மூக்கன் இருவரையும் கைது செய்தனர்.
கையூட்டு வாங்க முற்பட்டு துணை வட்டாட்சியர் கைதான சம்பவம் மேலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
– மதுரை வெண்புலி.