தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டின் முகப்பு சுற்றுசுவர் முழுவதும் தேசியக்கொடி வரைந்து அசத்தியுள்ளார்.
75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும், சுதந்திர தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் வகையிலும் அனைவரும் வீடுகளில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களிலும் தேசியக்கொடிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோள் மற்றும் அனைவரும் நாட்டுபற்றுடன் இருக்க வேண்டும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தினை போற்ற வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரில் முன்னாள் இராணுவ வீரர் அய்யலுசாமி என்பவர் தனது வீட்டின் முகப்பு சுற்றுச்சுவர் முழுவதும் தேசிய கொடியை வரைந்து தனது நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தியுள்ளார்.
1970 முதல் 1986 வரை இராணுவத்தில் பணியாற்றியுள்ள அய்யலுசாமி. 1971ல் நடைபெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பங்கேற்றுள்ளார். தேசபக்தி, நாட்டுபற்று மிக்க அய்யலுசாமியின் இந்த செயலை அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வீட்டை கடந்து செல்பவர்கள் தேசிய கொடிக்கு சல்யூட் செய்து செல்கின்றனர். அது மட்டுமின்றி 75வது சுதந்திரதினத்தினை கொண்டாடும் வகையில் தனது இல்லம் முழுவதும் புதிய வண்ணம் தீட்டியுள்ளதால், சுற்றுச்சுவரில் வரையப்பட்டுள்ள தேசிய கொடி அனைவரின் பார்வையையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் இராணுவ வீரர் அய்யலுசாமி கூறுகையில், 75வது சுதந்திர தின விழாவினை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொது மக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். நாம் கொடியேற்றுவது மட்டுமின்றி வீட்டின் முகப்பு சுற்றுசுவரை தேசிய கொடியாக மாற்றிவிடுவோம் என்று முடிவு எடுத்தோம் என்று தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.