மின் கட்டணம், மூலப்பொருள் விலை, ஜி.எஸ்.டி., உயர்வு ஆகியவற்றால், கோவையிலுள்ள பம்ப்செட் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களில் வாரத்தில், மூன்று நாட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யவும், இப்பிரச்னைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து, போராட்டத்தில் ஈடுபடவும் தொழில் அமைப்பினர் தயாராகி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த, கொரோனா பாதிப்பில் இருந்து, மீண்டு வருவதற்குள் கோவையிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகுந்த சிரமப்பட்டன. கொரோனா நீங்கினாலும், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு அடுத்த அடியாக இறங்கியது. இதற்கிடையே, பம்ப் செட் மற்றும் கிரைண்டர் உற்பத்திக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதையடுத்து தமிழக அரசு சொத்துவரி, தொழில்வரி ஆகியவற்றை வரலாறு காணாத வகையில், 300 சதவீதமாக உயர்த்தியது. கூடுதல் ‘ஷாக்’ தரும் விதமாக, மின் கட்டணத்தையும் உயர்த்தியது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் தத்தளித்தன. இச்சூழலில், தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, மின் கட்டணத்தை குறைக்க, தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆவன செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோவையிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை சேர்ந்த தொழில் அமைப்புகள் இணைந்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, ஆலோசனை மேற்கொண்டன. அதில் ஒரு தரப்பு, உற்பத்தியை வாரத்தின் மூன்று நாட்களுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளது. மற்றொரு தரப்போ, மின்கட்டணத்தை அரசு குறைப்பதாக உறுதியளித்துள்ளதால், போராட்டத்தில் ஈடுபடாமல் காத்திருக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, போசியா (கோவை தொழில் கூட்டமைப்பு) கூட்டம், காஸ்மா பேன் அலுவலகத்தில் ஒருங்கிணைப் பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முககுமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:மின் கட்டண உயர்வால், தமிழகத்தில் குறு, சிறு தொழில்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் தொழில்களை பாதுகாக்க, இத்தொழில்கள் மீது சுமத்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.ஒரு கிலோ வாட் முதல், 150 கிலோ வாட் வரை மின்சாரம் பயன்படுத்தும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு, உயர்த்திய நிலை கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், தொழில்களை பாதுகாக்க வேண்டும் ஆகிய, கோரிக்கைகளை, தமிழக முதல்வருக்கு அனைத்து தொழில் அமைப்புகளின் சார்பில், அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.