ஏழை, எளிய மக்கள் பயணிக்கும் பகல் நேர கோவை எக்ஸ்பிரஸ் ரயில், நள்ளிரவில் சென்னை செல்வதால், புதிய அட்டவணையில் நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.தெற்கு ரயில்வே வரும் அக்., 1ல் புதிய ரயில்வே கால அட்டவணையை வெளியிடுகிறது.
வழக்கமாக, புதிய கால அட்டவணை வெளியிடும்போது, பயணிகளின் வசதிக்கேற்ப, ரயில்களின் புறப்படும் நேரம், சேரும் நேரம் மாற்றி அமைக்கப்படும். பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்படும். இவ்வாறு பயண நேரம் மாற்ற வேண்டிய பல ரயில்கள் பற்றி, மக்களிடம் கருத்துக் கேட்கப்படாததால், இஷ்டம் போல் ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப் படுகிறது.
இதற்கு சிறந்த உதாரணம், கோவை எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில், 1977 ஏப்., 14ல் இருந்து இயக்கப்படுகிறது. முக்கிய ரயில்களில் ஒன்றான இது, தமிழகத்தின் முக்கியமான ஆறு மாநகராட்சிகளை பகல் நேரத்தில் கடந்து செல்வதுடன், வடமேற்கு தமிழகத்தின் மிகச்சிறந்த தொழில் நகரங்களை தலைநகருடன் இணைப்பதாக உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எல்லாவற்றையும் விட, குறைந்த கட்டணத்தால் ஏழை எளிய மக்கள் இதில் அதிகளவில் பயணிக்கின்றனர். கடந்த, 1998 ஏப்., 15ல் இருந்து, பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை வந்தபின், கோவை எக்ஸ்பிரஸ் ஆக சென்னை செல்கிறது. இந்த மாற்றம் செய்யப்பட்ட காலகட்டத்தில், கோவை எக்ஸ்பிரஸ் இரவு, 9:30க்கே சென்னை சென்று விடும்.
அங்கிருந்து மின்சார ரயில் மற்றும் பஸ்களில், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு மக்கள் எளிதில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், 2015ல்பெங்களூர் – கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் எர்ணாகுளத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
அப்போதிருந்து, கோவை எக்ஸ்பிரஸ் சென்னை செல்லும் நேரம் தாமதமாகி, இப்போது நள்ளிரவாகி விடுகிறது. பெங்களூர் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை எர்ணாகுளம் நீட்டிப்பதற்கு மாறாக, அமிர்தா எக்ஸ்பிரஸ் கோவைக்கு நீட்டிக்கப்படும் என சொல்லப்பட்டது; இன்று வரை நீட்டிக்கப்படவில்லை.
இதனால், கொங்கு மண்டல மக்கள், பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கோவையுடன் நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதற்கு பதிலாக, பெங்களூரு-எர்ணாகுளத்துக்கு தனி ரயில் இயக்க வேண்டுமென்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இம்மாற்றத்தையும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் செய்ய தயாராக இல்லை.
இதனால், மதியம், 3:20க்கு, கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் இருந்து கிளம்பி இரவு, 11:00க்கு சென்னை செல்லும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.ஆனால், பெரும்பாலான நாட்களில், இரவு, 12:00 மணி, 1:00 மணி என நள்ளிரவில், கொங்கு மண்டல மக்களை சென்னையில் இறக்கி விடுகிறது. அந்நேரத்தில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட ் பொதுப்போக்குவரத்து இருப்பதில்லை. வேறு வழியின்றி, ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லவேண்டியுள்ளது.
இல்லாவிடில், இரவு முழுவதும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் படுத்து துாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இந்த ரயில் கிளம்புவதற்கு, 10 நிமிடங்களுக்கு முன், சதாப்தி எக்ஸ்பிரஸ் கோவையில் கிளம்புகிறது. அதன் வேகம் அதிகம், நிறுத்தம் குறைவு என்பதால், இரவு, 10:00க்கே சென்னை செல்கிறது. சென்னையிலிருந்து கிளம்பும் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னையில் மதியம், 2:30க்கு கிளம்பி, கோவைக்கு இரவு, 10:20க்கே வந்து விடுகிறது. ஆனால், கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் மிகமிகத் தாமதமாகச் செல்கிறது.
கோவை எக்ஸ்பிரஸ் ரயில், இருக்கைகள் மட்டுமே கொண்ட பகல் நேர ரயில் என்பதால், சென்னைக்கான கட்டணம் ரூ.190 மட்டுமே. இதன் காரணமாகவே, ஏழை, எளிய மக்கள், குடும்பத்தோடு செல்லும் நடுத்தர மக்கள், இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இதில் குறையும் கட்டணத்துக்கு இரண்டு மடங்காக ஆட்டோக்களுக்கு செலவிடும் நிலையை, தெற்கு ரயில்வே ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அக்., 1ல் வெளியிடப்படும் புதிய கால அட்டவணையில் இந்த ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலியுறுத்தப் பட்டுள்ளது. கோவையின் ரயில்வே கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் தெற்கு ரயில்வே அதிகாரிகள், இதையாவது செய்தால் நல்லது!
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.