கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு! போதிய விழிப்புணர்வு இல்லையோ என்ற ஐயம்!!

அதிக கல்வி நிறுவனங்கள் கொண்ட, கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் இருந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் களில், 50 சதவீதம் பேர் மட்டுமே, தேர்வு எழுதியுள்ளனர். மாணவர்களின் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்கி, வரும் ஆண்டுகளிலாவது அதிக மாணவர்களை பங்கேற்கச் செய்ய, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.

‘நீட்’ எனும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு, கடந்த ஜூலை, 17 ம் தேதி நடந்தது. தேர்வு ரிசல்ட், கடந்த 7 ம் தேதி வெளியான நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், கட்-ஆப் மதிப்பெண்கள் குறித்த, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக, இத்தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விபரம், இயக்குனரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 17 ஆயிரத்து 972 அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இத்தேர்வை 12 ஆயிரத்து 840 பேர் எழுதினர். இதில், 4 ஆயிரத்து 447 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசுப்பள்ளிகள், 35 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்றன. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் இருந்து, ஆயிரத்து 912 பேர் விண்ணப்பித்தனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதற்கு அடுத்த நிலையில், திருவண்ணாமலை, திருவள்ளூர், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்து உள்ளனர்.ஆனால், கோவை மாவட்டத்தில், 116 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில், 166 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதில் தேர்வுக்கு, 50 சதவீதம் பேர் ‘ஆப்சென்ட்’ ஆன நிலையில், 82 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 74 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர். 90 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றிருப்பினும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை சொற்பம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக கல்வி நிறுவனங்கள் கொண்ட, கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது, இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது தகைசால் மற்றும் மாடல் பள்ளி ஆகிய இரு திட்டங்களிலும், கோவை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலாவது, நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்போரின் சதவீதத்தை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென்ற, கருத்து எழுந்துள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ”போட்டியில் முதலிடம் பெறுவது என்பது, பங்கேற்பாளரின் எண்ணிக்கையை பொறுத்ததே. அதிக தேர்ச்சி சதவீதம் பெறுவதற்கு, முக்கியத்துவம் அளிக்காமல், அதிக மாணவர்களை இதுபோன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, ஊக்குவிக்க வேண்டும்.

இம்முயற்சி, பள்ளிகளின் முன்னெடுப்பில்தான் சாத்தியமாகும். தலைமையாசிரியர், பாட ஆசிரியர்கள், நுழைவுத்தேர்வு எழுதுவதன் அவசியத்தை, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், இடஒதுக்கீட்டில் சீட் கிடைக்க போவதில்லை. ஆனால், இதுபோன்ற முயற்சிகள், போட்டித்தேர்வுகளுக்கு கைகொடுக்கும். குறைந்தபட்சம் ஒரு பள்ளியில் இருந்து, 10 மாணவர்களையாவது நீட் தேர்வுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்,” என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp