சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் பேரூராட்சி மன்றத்தலைவராக திமுகவைச் சேர்ந்த கோகிலாராணி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது கணவர் நாராயணன். உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்களின் செயல்பாடுகளில் அவர்களது கணவரோ, குடும்பத்தில் உள்ள மற்ற ஆண் உறுப்பினர்களோ தலையிட்டு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என மக்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
ஆனால் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத்தலைவராக கோகிலா ராணி பதவி ஏற்ற நாள் முதல் பேரூராட்சி நிர்வாகத்தில் அவரது கணவர் நாராயணனின் தலையீடு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேரூராட்சி அலுவலகத்தில் தலைவரின் இருக்கையில் அவரது கணவர் நாராயணன் அமர்ந்து கொண்டு செயல்படுவதாகவும், அதுகுறித்து துணைத்தலைவர் கான் முகமதுவுக்கும், நாராயணனுக்கும் இடையே இரண்டு மாதங்கள் முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்தே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனை செய்தியாக வெளியிட்ட செய்தியாளர்களுக்கு நாராயணன் மிரட்டல் விடுத்த நிலையில், பின்னர் இந்தப் பிரச்சினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனிடம் சென்றுள்ளது. ஆனால் அமைச்சர் இது சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பத்தூரில் மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக விநியோகம் செய்யப்படாததையும், அதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீர் 20, 25 ரூபாய் பணம் கொடுத்து வாங்கும் அவல நிலையில் உள்ளதையும் தினசங்கு பத்திரிக்கையின் திருப்பத்தூர் செய்தியாளர் முத்து முகமது என்பவர் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்.
இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த பேருராட்சி மன்றக்கூட்டம் பற்றிய செய்தி சேகரிப்பதற்காக முத்து முகமது திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார். பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து அவரைப் பார்த்த பேரூராட்சித் தலைவர் கோகிலா ராணியின் கணவர் நாராயணன், ‘எனக்குச் சாதகமாக செய்தி வெளியிடாத உன்னை, மன்ற கூட்டத்திற்கு யார் அழைத்தது? வெளியே போய்யா.
எனக்கு சாதகமாக செய்தி வெளியிட்டால் உள்ளே வா, இல்லையேல் பேரூராட்சி அலுவலக வாசலுக்குக் கூட வராதே. நான் ஒரு நிலையில் இருக்க மாட்டேன். அடித்துத் துவைச்சு தொங்க விட்டுடுவேன். உனது வேலையெல்லாம் வேறு எங்காவது காண்பிக்கவும், வெளியே போ’ என ஏக வசனத்தில் மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதன்பின் அருகிலிருந்த மற்ற செய்தியாளர்கள் முத்து முகமதுவை அழைத்து கொண்டு வெளியே வந்தனர்.
மாதாந்திர கூட்டத்திற்கு பத்திரிக்கையாளரை அனுமதிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் இருந்தும் தொடர்ந்து பல மாதங்களாக மன்ற கூட்டங்களுக்கு, நாராயணனுக்குச் சாதகமாகச் செயல்படும் சில பத்திரிக்கையாளர்களைத் தவிர, மற்றவர்களை அழைக்காமல் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பேரூராட்சித் தலைவரின் கணவர் பெரும்பாலான பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க மறுப்பதாக செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பலமுறை பதிலளித்துளார். பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு வந்தால், கவுன்சிலர்கள் கோரிக்கைகளை அடுக்குகின்றனர்.
அதை பத்திரிக்கையாளர்கள் செய்தியாக வெளியிட்டு விடுவதாகவும், அது தனக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குவதாகவும் பேரூராட்சித் தலைவரின் கணவர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பேரூராட்சித் தலைவரின் கணவர் நாராயணன், ‘அமைச்சரின் உறவினர் நான். என்னை எவனும் எதுவும் செய்ய முடியாது. என்னை அனுசரித்து, எனக்கு சாதகமாக செய்தி வெளியிடுபவர்களை மட்டுமே பேரூராட்சியில் அனுமதிப்பேன்’ எனக் கூறி வருவதாகவும் திமுகவினரிடையே பேச்சு நிலவுகிறது.
மேலும் நாராயணனின் இது மாதிரியான போக்கு, பொதுமக்களிடையே திமுகவிற்கு அவப்பெயரைத் தேடித் தரும் என ஏராளமான திமுக தொண்டர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நிருபரை மிரட்டிய நாராயணனுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், நாராயணனைக் கண்டித்து திருப்பத்தூர் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் கோரிக்கையோடு செய்தி வெளியிடும் செய்தியாளர்களை மிரட்டும் திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவரின் கணவரைப் போன்றவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் இவர்களைப் போன்றவர்கள்,
இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு அவப்பெயரேயே தேடித் தருவார்கள்.
– பாரூக், சிவகங்கை.