தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 2008 முதல் 2011 வரை ஒரு வீட்டிற்கு ரூ.5ஆயிரம், முதல் 6 ஆயிரம் வரை வைப்புத் தொகை பெறப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் கடந்தும் அந்த பணிகள் முடிக்கவில்லை. இப்போது பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட அதே தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தெருக்களில் மட்டும் கழிவுநீர் கால்வாய் மூடி போடுகின்றனர். சில தெருக்களில் திறந்த வெளி கழிவு நீர் கால்வாயாக அமைத்து வருகின்றனர்.
பாதாள சாக்கடைக்கு பணம் வாங்கிவிட்டு திறந்த வெளி சாக்கடை கால்வாய் அமைப்பது எப்படி சரியாகும்? என்று மாநகராட்சி ஊழியர்களிடம் பிரையண்ட் நகர் கிழக்கு பகுதி குடியிருப்பு வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் சாக்கடை கால்வாய் தோண்டுவதையும், மரங்கள் வெட்டுவதையும் போட்டோ எடுத்த குடியிருப்புவாசிகளின் செல்போனை பறித்து வைத்துக் கொண்டு பெண்களை அவதூறாகவும் பேசினாராம்.
அவர் கட்சிக்காரரா, அதிகாரியா என்று தெரியாத நிலையில் படத்தில் இருக்கும் (கட்டம் போட்ட சட்டை) அந்த மர்ம நபர் அங்கு கூடியிருந்த குடியிருப்புவாசிகளை எச்சரித்து விட்டு கூட்டம் கூடுவதைக் கண்டு அந்த இடத்திலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஒரு தெருவில் பாதாள சாக்கடை, ஒரு தெருவில் மூடிய கழிவுநீர் கால்வாய், ஒரு தெருவில் திறந்த வெளி சாக்கடை, இடையில் மழைநீர் வடிகால் என்று ஸ்மார்ட் சிட்டியைப் பார்த்து குழம்பிக் கிடக்கும் மக்களிடம் மர்ம நபர்கள் தேவையற்ற வாக்குவாதம் செய்து அத்துமீறுவது தூத்துக்குடி மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–வேல்முருகன் தூத்துக்குடி.