கோவை கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம், கடைசிவாரம் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்நடத்தப் படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனு கொடுக்க மக்கள் வருகின்றனர்.
பத்திரிகையாளர்கள் பெயரில், அவர்களை அணுகும் சிலர், அதிகாரிகளிடம் கூறி, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்து பணம் வசூலிக்கின்றனர். சிலர் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்திருக்கிறது. இது, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குச் சென்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுதொடர்பாக, கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரிகையாளர்கள் பெயரில் சிலர், கலெக்டர் அலுவலகத்தில் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன்எனவும், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களை ஏமாற்றி, பணத்தை பறித்து விடுவதாக, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வந்துள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, காவல்துறை வாயிலாக வழக்கு பதியப்படும்.
கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் முன், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர் போலியான அடையாளஅட்டை பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
அந்நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அரசுப் பணியில் உள்ள அலுவலர்களிடம், அவர்களின் பணிக்கு இடையூறு செய்யும் வகையில், பிறரின் கோரிக்கை மனுக்களை, பத்திரிகையாளர் பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க, அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள், 94980 42423 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணுக்கு, தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.