பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே புதுப் பாளையம் தடுப்பணையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.பருவ மழைக்காலங்களில் தடாகம் வட்டாரம், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி, தடாகம் பெரிய பள்ளம், சோமையம்பாளையம், கணுவாய் கீழணை, மேலணை ஆகியவற்றை நிரப்புகிறது. குருடி மலையில் இருந்து உற்பத்தியாகும் கவுசிகா நதி, பல்வேறு ஓடைகளாக உருமாறி நொய்யலை சென்று அடைகிறது. கதிர் நாயக்கன் பாளையம் வட்டாரத்தில் பெய்யும் மழை நீர், நேரு நகர், கதிர் நாயக்கன் பாளையம் பிரிவு, வெத்தலை காளிபாளையம், ஸ்ரீ பாலாஜி நகர், ராக்கிபாளையம் வழியாக புதுப்பாளையம் தடுப்பணையை வந்து அடைகிறது. தடுப்பணையில் நிறைந்திருக்கும் வெள்ள நீரால் நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, மணியகாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகி, பயிர் சாகுபடிக்கும், குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியாக உள்ளது. இத்தடுப்பணை அருகே கோழி, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் தடுப்பணையின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதித்து, நிலத்தடி நீர் மாசுபடும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து, இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தடுப்பணையில் சாக்கடை நீர் கலப்பதால், தடுப்பணை நீர் மாசுபட்டு கிடக்கிறது. தடுப்பணையை துார்வார பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.தடுப்பணையின் நீர் வெளியே தெரியாத வகையில் ஆகாயத்தாமரை வளர்ந்து கிடக்கிறது. இதனால், மீன்களைத் தேடி வந்து கொண்டிருந்த கொக்கு, நாரை உள்ளிட்ட பறவைகள் இப்போது தடுப்பணைக்கு வருவதில்லை.இந்நிலையில், தடுப்பனையின் கரையில் இறைச்சி, கோழி கழிவுகளை துடியலுார், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில், நான்கு சக்கர வாகனங்களில் வந்து, கொட்டிச் செல்கின்றனர்.சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவேண்டும்.இவ்வாறு, அப்பகுதி மக்கள் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.