கோவை பாப்பநாயக்கன் புதுாரில் ஒரே மாதத்தில் தொடர்ந்து மூன்று மயில்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, மருதமலை ரோட்டில் விவசாய நிலங்கள், வேளாண் பல்கலைக்கு சொந்தமான விளை நிலங்களில், மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. போதிய உணவு கிடைக்காததால், குடியிருப்பு பகுதிகளுக்குள், உணவு தேடி மயில்கள் வருவதும் தொடர்கிறது. இவ்வாறு, வரும் மயில்கள் மின் கம்பிகளில் உரசி உயிரிழக்கும், துரதிஷ்ட சம்பவங்கள் நடக்கின்றன. வடவள்ளி ரோடு, 41வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்புதுார் அருகே ராம்ஸ் நகரில், நேற்று முன்தினம் மயில் ஒன்று இறந்து கிடப்பதாக, அப்பகுதி கவுன்சிலர் சாந்தியிடம் மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினரிடம் உயிரிழந்த மயில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே மாதத்தில் மூன்று மயில்கள் அப்பகுதியில் உயிரிழந்துள்ளது, அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுன்சிலர் சாந்தி கூறுகையில், ”இந்த பகுதியில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பது அடிக்கடி நடந்துவருகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு தேடி வரும் மயில்கள், மின் கம்பிகளில் மோதி உயிரிழக்கின்றன. வனத்துறையினர் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.