திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் விடுதி உரிமையாளர், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கீழ வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி சண்முகசுந்தரி. நகர பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர். ராமகிருஷ்ணன், திருச்செந்தூர் நாழிக்கிணறு பஸ்நிலையம் அருகில் விடுதி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ராமகிருஷ்ணனின் விடுதியிலும், அதன் அருகில் உள்ள மற்றொரு விடுதியிலும் விதிகளுக்கு மாறாக கட்டண கழிப்பறை, குளியலறை நடத்துவதாக கூறி, கடந்த மாதம் அந்த 2 விடுதிகளிலும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் நகராட்சி நிர்வாகத்தினர் அந்த விடுதிகளை ஆய்வு செய்ததில், ஒரு விடுதிக்கும் மட்டும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ராமகிருஷ்ணன் தனது விடுதிக்கு மட்டும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, இன்று பிற்பகலில் தனது மனைவி சண்முகசுந்தரியுடன் திருச்செந்தூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் மண்எண்ணெய் கேனுடன் சென்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரி ஆகிய 2 பேரும் தங்களது உடலில் திடீரென்று மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
உடனே நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, கவுன்சிலர் கண்ணன் உள்ளிட்டவர்கள் விரைந்து சென்று, தம்பதியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியிடம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ராமகிருஷ்ணனின் விடுதிக்கு விரைவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட தம்பதியர் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசுகோபி, ஶ்ரீவைகுண்டம்.