கோவில்பட்டியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் படித்த பள்ளி ரூ. 25 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில், ஸ்ரீ கிருஷ்ண இராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக “கரிசல் காட்டு இலக்கியத்தின்”, முன்னோடி கி. ரா என அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் 16. 09. 1922-ல் பிறந்தார். பேச்சுத் தமிழில் சாகாவரம் பெற்ற மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்தவர். Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்பும் மிக்க மக்களின் வாழ்வும் அவரது படைப்புகளில் சாகாவரம் பெற்றன. இந்த மண்ணின் உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக்குழந்தைகள், கதவு மற்றும் நாற்காலிகள் கூட அவரின் கதை மாந்தர்களாக மாறி மாயம் நிகழ்த்தின. 1958 முதல் 2021 வரை இலக்கிய பணி செய்துள்ளார்.
1991-ம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்கு “சாகித்ய அகாடமி விருது” பெற்றுள்ளார். 2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி. ராவிற்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் கி. ரா. 2021ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். வட்டார பேச்சு வழக்கை அதற்குரிய உயரிய இடத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் பறைசாற்றிய கி. ரா. கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். 1946-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், பல்வேறு கால சூழ்நிலைகளால் பொலிவிழந்து இருந்த நிலையில் பழமை குன்றாமல், சுவர்பூச்சுக்கு வெள்ளை சுண்ணாம்பு வைப்பார் ஆற்று மணல், கருப்பட்டி, கடுக்காய், முட்டை கலவை மூலம் மீண்டும் மெருகேற்றப்பட்டுள்ளது.
மேலும் புதிய ஒடுகள் திருச்சூரிலிருந்தும், தேக்கு ஜன்னல்கள் செங்கோட்டையில் இருந்தும், பனங்கைகள் சாத்தான்குளத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டு, பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தன் வாழ்நாளை மண் சார்ந்த காவியங்களுக்கு உரித்தாக்கி எளிமையாக வாழ்ந்த கி. ரா. படித்த பள்ளி, மண்ணின் வாசனை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது நினைவுகள் அனைத்து தரப்பினரும் போற்றத்தக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் கா. மகாலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், கோவில்பட்டி வட்டாட்சியர் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இடைசெவல் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.