நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11 சதவீதம் குறைந்துள்ளது. 2011ல் 21.8ஆக இருந்த பிறப்பு விகிதம் 2020ல் 19.5ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் 23.3ல் இருந்து 21.1 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 17.6ல் இருந்து 16.1ஆகக் குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் என்பது மக்கள்தொகை வளர்ச்சியின் முக்கிய குறியீடு ஆகும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதேபோல குழந்தை பிறப்பில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே பாலின சமத்துவம் இல்லாத நிலையும் உள்ளது. அதன் காரணமாக சமூக சமநிலை பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கு, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து பெண் குழந்தையாக இருந்தால் அதைக் கலைப்பதும், பெண் சிசுவைக் கொலை செய்வதும்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தச் செயல்கள் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக் கொலையைத் தடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அரசு தாலுகா தலைமை மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் தலைமை தாங்க, பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து மற்றும் துணைத் தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிவது குற்றம், பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக் கொலை செய்வது சட்டப்படி தவறு போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி கல்லூரி மாணவிகள் நடைபோட்டு வந்தனர்.
தாலுகா தலைமை மருத்துவமனையில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் சுந்தரம்நகர், திண்டுக்கல் சாலை, பெரியகடை வீதி வழியாக மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுபசங்கரி, ஹரி பிரசாத், கோபிநாத், அருண்பிரசாத், சிவபிரியா மற்றும் ரெங்க மணிகண்டன், தலைமை செவிலியர்
ஜானகி உள்ளிட்ட செவிலியர்கள், மருத்துவமனை மருந்தாளுனர் சேகர், தொழிலதிபர்கள் ஆர்.எம்.எஸ்.சரவணன், கே.ஆர்.ஏ.கணேசன் மற்றும் காந்திமதி சிவக்குமார், சமூக ஆர்வலர் திருமாறன், அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.