தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மட்டுமே வந்ததாகவும் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனில் அகர்வால் எனும் தொழிலதிபருக்குச் சொந்தமான வேதந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை ஒன்று தூத்துக்குடியில் செயல்பட்டு வந்தது. இந்த ஆலையிலிருந்து வெளியாகும் புகை மற்றும் கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேசிய அளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தின் 100ஆவது நாளான மே 22/2018 அன்று, ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர்.
அப்போது, அந்தப் பேரணியில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட கலவரத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேரை காவல்துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டது பற்றியும், அரசின் செயல்பாடு பற்றியும் அருணா ஜெகதீசன் கூறுகையில்,
‘கொடுங்காயம் அடைந்தவர்களையும், உயிருக்குப் போராடியவர்களையும், அவர்களின் தனியார் ஆம்புலன்ஸ்களில் எடுத்துச் சென்றதும், பல முறை இதுபோல் கொண்டுபோய் அரசு மருத்துவமனையில் சேர்த்ததும் மனித நேயத்தைக் கருத்தில்கொண்டு செய்ததாகும். இது சம்பந்தமாக,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒரு சேவை அமைப்பான தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முன்வந்துள்ளதைக் குறிப்பிட வேண்டும். துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப்பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும். மதச்சார்பற்ற மாநிலத்தில் இப்போது இது தேவையானதாகும்.
இந்தச் சூழலில் முன்னிலைப்படுத்த வேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன 12 நபர்களும் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்படவில்லை.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் நல்லதம்பி தனியார் மருத்துவமனை ஆகியவற்றிற்குச் சொந்தமான தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
இறந்தவர்கள் போக, கொடுங்காயங்கள் ஏற்பட்டு மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்து மயிரிழையில் உயிர்பிழைத்தவர்களும் இந்தத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார்களே தவிர, 108 ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரப்படவில்லை.
எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியோர் புரிந்த முன்மாதிரி மனிதாபிமானச் சேவைகள் இந்த ஆணையத்திடமிருந்து சிறந்த பாராட்டு பெறத் தகுந்தவை ஆகும்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நல்லதம்பி மருத்துவமனை மற்றும் சில தனியார்கள் குறிப்பிட்ட நேரத்தில் தன்னிச்சையாகவும், தன்னார்வத்துடனும் வந்து உதவியும் சேவையும் செய்திருக்காத நிலையில் நிலைமை மிகவும் மோசமாகி, மேலும் பல உயிர்களை இழக்க வேண்டி இருந்திருக்கும்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துன்பப்படுகிறவர்களுக்கு விரைந்து சென்று உதவி செய்தும், கோவிட்-19 பேரிடர் காலத்தில் இறந்தவர்களின் சடலங்களை மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த சமுதாய சடங்குகளின்படி, மேற்சொன்ன உடல்களை அடக்கம் செய்து நற்பெயர் பெற்றது போன்ற நிகழ்வுகளிலும் பாராட்டத்தக்கச் சேவைகள் புரிந்திருக்கிறார்கள். அவர்களது சேவைகளைக் குறைத்து மதிப்பிட முடியாது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று இபிஎஸ் கூறியது தவறு என்றும், அவருக்கு அப்போது நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் நிச்சயமாக மிகை நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
– பாரூக், சிவகங்கை.