கோவை மேற்கு புறவழிச்சாலை அமைக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு விட்டாலும், நிலம் கையகப்படுத்தும் பணி முடியாததால், ரோடு அமைக்கும் பணியைத் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோவை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மேற்கு புறவழிச்சாலைத் திட்டம், 2010ல் தி.மு.க., ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது; ஆனால், பணி துவங்கவில்லை.
2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அதே திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டு, அளவீடு மாற்றப்பட்டது; துாரம் அதிகரிக்கப்பட்டது. அப்போதும் பணி துவங்கவேயில்லை.மீண்டும், 2016ல் ஆட்சிக்கு வந்தபின்பும், பல ஆண்டுகளுக்குப் பின்பே, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலக்காடு ரோட்டில் மைல்கல் அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் ரோட்டில் கூடலுார் அருகே முடிவடையும் வகையில், 32.43 கி.மீ.. துாரத்துக்கு இந்த ரோடு அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 15 வருவாய் கிராமங்களில் அரசு நிலம், 57 ஏக்கர் உட்பட, 361 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்கு, 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 313 கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. ரோடு அமைக்க, 647 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் பகுதியான மைல்கல்-சிறுவாணி ரோடு செல்லப்பம்பாளையம் வரையிலான 11.8 கி.மீ., துாரத்துக்கு, 210 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, தமிழக பட்ஜெட் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, கடந்த செப்., 29ல், ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு விட்டது.
ஆனால், ரோடு அமைக்கும் பணி துவங்குவதற்கான அறிகுறி தெரியவில்லை. நெடுஞ்சாலைத் துறையினரைக் கேட்டால், நிலம் கையகப்படுத்தித் தராததே காரணமென்று சொல்கின்றனர்.
வருவாய்த் துறையினரிடம் அதற்கான பதில் கிடைப்பதில்லை. கலெக்டரும், இதை பல மாதங்களாகக் கண்டு கொள்ளவேயில்லை. நீண்ட இடைவெளிக்குபின், நேற்று முன் தினம் கோவையில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, பல்வேறு அரசுத்துறைகள் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை கலெக்டர் நடத்தியுள்ளார்.
இதில், மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்தின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் எந்த முக்கியமான முடிவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தால் மட்டுமே, முதற்கட்டமாக ரோடு அமைக்கும் பணியைத் துவக்க முடியும். அதற்கு, மதுக்கரை, சுண்டக்காமுத்துார், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம் மற்றும் மாதம்பட்டி ஆகிய ஐந்து வருவாய் கிராமங்களில், 137 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும்.
இதில், 20 ஏக்கர் அரசு நிலமும் உள்ளது.
மீதமுள்ள, 117 ஏக்கர் தனியார் நிலங்களில், கடந்த ஏப்ரலிலேயே 70 ஏக்கர் நிலத்துக்குப் பத்திரப்பதிவு முடிந்து விட்டது; மே மாதத்துக்குள் அனைத்து நிலமும் கையகப்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர். ஆறு மாதங்களாகியும், இப்போது 80 ஏக்கர் அளவுக்கே பத்திரப்பதிவு முடிந்துள்ளதாகத் தெரிகிறது.நெடுஞ்சாலைத்துறைப் பணிகளுக்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு சிறப்புப் பிரிவு துவக்கியும், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள அசாத்தியமான தாமதம் புரியாத புதிராக உள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வாய் திறக்க மறுக்கின்றனர். இந்தாண்டு இறுதிக்குள் இப்பணியை துவக்குவதாகத் தெரியவில்லை.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை.