சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய 3 ஒன்றியங்களில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கூட்டத்தின் துவக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் போன்ற 13 அம்ச திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கிராமத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு சேவைகளான நல்ல குடிநீர், தெரு விளக்கு, சாலை ஏற்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் உள்ள பழைய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், சுகாதார மைய கட்டிடங்களை புனரமைத்தல், மேலும் இந்தக் கட்டிடங்கள் இல்லாத கிராமங்களுக்கு அவற்றை புதிதாக ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம மக்கள், இளைஞர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், வாராப்பூர், மகிபாலன்பட்டி மற்றும் செல்லியம்பட்டி போன்ற சில ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பலமுறை நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஏன் செயல்படுத்தவில்லை எனவும், அதற்கான காரணம் என்ன எனவும் கேள்விகளை பலர் எழுப்பினர்.
அதோடு மட்டுமல்லாது எதிர் வர இருக்கும் காலம் பருவ மழைக்காலம் என்பதால் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள குளங்கள், கண்மாய்கள் போன்றவற்றிற்கு குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக நீர்வள ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர்களும், அரசு அதிகாரிகளும் உரிய பதிலளித்தனர்.
மேலும் கிராம சபை கூட்டத்தின் போது பெறப்பட்ட மனுக்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் மாவட்ட நிர்வாகத்தினால் பரிசீலிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக விரைந்து தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தனர்.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று முழங்கி தமிழையும், தமிழனையும் உலக அரங்கில் பெருமைப்படுத்திய சங்ககாலப் புலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனாருக்கு மகிபாலன்பட்டியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் எழுப்பப்பட்டுள்ள நினைவுத்தூண் பணி முழுமையடையாமல் பாதியிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருவதை விரைந்து முடிக்கும்படியும், அதே பகுதியில் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்கும்படியும் மகிபாலன்பட்டி ஊராட்சி மக்களால் தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், காவல்துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
– பாரூக், சிவகங்கை.