நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் பாதுகாப்பு!! நடவடிக்கை எடுப்பார்களா அரசு அதிகாரிகள்!!

பண்டிகை சீசன் உச்சத்தை எட்டி வரும் நிலையில், கோவை நகருக்குள் நடைபாதைகள் அனைத்தும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், சாலையோரம் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ரோட்டில் நடக்க வேண்டியுள்ளது.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், கோவை நகர வீதிகளில் ‘ஷாப்பிங்’, களைகட்டியுள்ளது. குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, பெரிய கடை வீதி, ரங்கே கவுடர் வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, உள்ளிட்ட பல்வேறு வீதிகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. கொரோனா தாக்கத்தால், இரண்டு ஆண்டுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்த வணிக நிறுவனத்தினரும், வர்த்தகர்களும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

ஜவுளியும், வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கடைகளில் குவிக்கப் பட்டுள்ளதோடு, ரோட்டுக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகமாகியுள்ளது. ரோடு, நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் இந்தக் கடைகள் தரும் மாமூலுக்காகவே, பல வீதிகளை அடைத்து, வாகனங்களை சுற்றி விடும் வேலையை போக்குவரத்து போலீசார் செய்வதாக, நெரிசலில் சிக்கித்தவிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவை தவிர, அவினாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, சிவானந்தா காலனி, வெரைட்டி ஹால் ரோடு, பெரியகடை வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளும், நடைபாதைகளும் நிரந்தரக் கடைகளின் நீட்டிப்பாலும், தற்காலிகக் கடைகளாலும், பெருமளவில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.

முன்பெல்லாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும், சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டங்களில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஆக்கிரமிப்புகள் அகற்றுவது பற்றி, எந்தக் கூட்டமும் நடத்தப்படவில்லை; ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை.
இதனால் புதுப்புது வடிவில் ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன.

சமீபகாலமாக, கடைகளின் போர்டுகளை நடைபாதைகளிலும், ரோடுகளிலும் வைத்துக் கொண்டு, அவற்றுக்கு இடையிலான இடங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது. டூ வீலர்களை நிறுத்தும் இடங்களில், கடைக்காரர்களே தடுப்புகளை வைத்து, வண்டிகளை நிறுத்த விடாமல் தடுப்பதும், அதனால் தகராறு ஏற்படுவதும் அடிக்கடி நடக்கிறது. ஏற்கனவே, கோவை நகரில் போக்குவரத்து போலீசாரின் ‘புதுப்புது’ முயற்சிகளால், அனைத்து ரோடுகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி வருகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நெருக்கியடித்து வரும் வாகனங்களுக்கு இடையில், மக்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நடந்து செல்வோருக்கு எங்கும் பாதையே இல்லை. நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மாநகராட்சி நகர அமைப்புப் பிரிவினரின் அதிமுக்கியப் பணியாகும்.

தற்காலிகக் கடைகளை கணக்கெடுத்து, நகருக்குள் சிறு வியாபாரிகளுக்கான சந்தையை ஏற்படுத்தித்தர வேண்டிய பொறுப்பும், மாநகராட்சி நிர்வாகத்துக்கே உள்ளது. இப்போது நகருக்குள் ஏற்பட்டுள்ள நெரிசலுக்கும், மக்களின் பாதுகாப்பற்ற பயணத்துக்கும் காரணம், இங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்திறமை யின்மையும் மெத்தனமும்தான். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே, இதற்குத் தீர்வு கிடைக்கும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp