மசினகுடி வனப்பகுதியில் ரோந்து சென்ற போது, காட்டெருமை தாக்கி வனக்காப்பாளர் படுகாயம் அடைந்தார். நீலகிரி மசினகுடி, மசினகுடி வனப்பகுதியில் ரோந்து சென்ற போது, காட்டெருமை தாக்கி வனக்காப்பாளர் படுகாயம் அடைந்தார். காட்டெருமை விரட்டியது முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டை கும்பல்கள் நடமாட்டம் உள்ளிட்ட வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தநிலையில் நேற்று மசினகுடி வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதியம் 12 மணிக்கு உப்பள்ளா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென வனத்துறையினரை நோக்கி ஓடி வந்து விரட்டியது. இதைக் கண்ட வன ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால், வனக்காப்பாளர் சசிதரன் (வயது 53) என்பவர் காட்டெருமையிடம் சிக்கினார்.
வனக்காப்பாளர் படுகாயம் மேலும் காட்டெருமை அவரை முட்டி தள்ளியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனிடையே வன ஊழியர்கள் கூச்சலிட்டு காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்து காட்டெருமை சென்றது. தொடர்ந்து படுகாயமடைந்த சசிதரனை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. வனவிலங்குகள் தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி வன ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
சசிதரன் வனக்காப்பாளர் அவர்களுக்கு மருத்துவ அறுவைசிகிச்சை முடிந்துள்ளது உள்ளுறுப்புகள் ஏதும் பாதிப்பில்லை என மருத்துவர்கள் கூறினர் விலா எலும்பில் முறிவு ஒன்று உள்ளது. தற்போது நலமாக உள்ளார், என்று கூறினர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
வனத்துறையில் உள்ள வன பாதுகாப்பு காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் மேலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வன பாதுகாவலருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் முதுமலை சுற்றுலா தளத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் சுற்றுலாப் பயணிகளை வனத்திற்குள் அழைத்துச் செல்ல சில ஒப்பந்த பணியாளர்களை நியமித்துள்ளார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தை ஒட்டி உள்ள பகுதியான தெப்பக்காடு மசனகுடி பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குடியிருந்து வருவதால் தமிழக வனத்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பாக செயல்பட்டு வரும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு அதிநவீன வாகனங்கள் மற்றும் நவீன உபகரணங்களை கொடுத்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர்.
-சத்யா நீலகிரி.