வால்பாறைக்கு, தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வாகனங்களில் செல்கின்றனர். மலைத்தொடர்களுக்கு இடையே செல்லும் கொண்டைஊசி வளைவுகளில், சுற்றுலா பயணியர் அணையின் அழகு, ரோட்டோரம் அமர்ந்துள்ள குரங்கு, வரையாடுகளை பார்த்தபடியே செல்கின்றனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், சுற்றுலா பயணியர், வால்பாறை செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்த கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சில சுற்றுலா பயணியர் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலை பின்பற்றாமல், வால்பாறை செல்லும் வழித்தடத்தில், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி போட்டோ, செல்பி எடுப்பது என விதிமீறுகின்றனர்.
இதுபோன்ற, செயல்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், வீண் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பாக அமையும்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘வனப்பகுதி ரோடுகளில் வாகனங்களை நிறுத்தி போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை கண்காணித்து தடுக்க, வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
தேவையின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். விதிமுறை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக், மது பாட்டில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது போன்று, இதையும் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுத்தால், வீண் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்,’ என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.