வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னைகளை அப்பகுதி மக்கள் குமுறித்தீர்த்த நிலையில், இன்று நடக்கும் அதிகாரிகள் உடனான கூட்டத்தில் தீர்வு காணப்படும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்புக் குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்டாயம் தீர்வு கிடைக்கும் என, காத்திருக்கின்றனர் மக்கள்.
கோவை மாநகரில் தினமும் சேகரமாகும், டன் கணக்கிலான குப்பை வெள்ளலுார் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதார சீர்கேடு, நோய் பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். இது தொடர்பாக, பசுமை தீர்ப்பாயத்தில் வழங்கு தொடரப்பட்ட நிலையில், திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், மாநில கண்காணிப்புக் குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி, வெள்ளலுார் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட செயல்பாடுகளை சுமார், 3 மணி நேரம் நேற்று ஆய்வு செய்தார்.
மதியம், 3:00 மணிக்கு குப்பை கிடங்குக்கு காரில் வந்த அவரை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். நீதிபதியிடம் அவர்கள், ‘இங்கு நாங்கள் தினம் தினம் செத்து வாழ்கிறோம். ஒரேயடியாக எங்களை கொன்று விடுங்கள். நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசடைந்து வருகிறது. நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் மாறிவிட்டது. துர்நாற்றத்தால் நிம்மதியாக சாப்பிடக்கூடிய முடிவதில்லை.
ஈக்களின் தொல்லை வேறு. குப்பை லாரிகள் ரோட்டில் வரும்போதே, கழிவுகள் சிதறுகின்றன. பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவரும் நிலையில், இப்பகுதியில் மருத்துவ முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இங்கு குப்பை கிடங்கே வேண்டாம்’ என, குமுறித்தீர்த்தனர்.இது குறித்து நீதிபதி ஜோதிமணி, மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அதிகாரிகள் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மக்களிடம் நீதிபதி ஜோதிமணி பேசுகையில், ”உங்கள் பிரச்னைகளை என்னால் உணரமுடிகிறது. அந்தந்த பகுதிகளில் பெறப்படும் குப்பையை, நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் வாயிலாக தீர்வு காணலாமே. அப்படி செய்தால், குப்பையை இங்கு எடுத்துவர வேண்டியிருக்காது. மக்கள் நோய் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், ஏன் மருத்துவ முகாம் நடத்தவில்லை; உடனடியாக நடத்த வேண்டும்.
லாரிகளில் இருந்து குப்பை கீழே விழாமல் இருக்க, மேல் வலை விரித்து கொண்டுவர வேண்டும். நாளை(இன்று) கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் உடன் நடக்கும் கூட்டத்தில், இப்பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர். நீதிபதி உறுதியளித்ததை கேட்ட மக்கள், நிம்மதி அடைந்தனர்.இதனால், நீண்ட கால பிரச்னைக்கு இன்று தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.