அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரில் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் கட்சி தொண்டர்கள் விழித்துக் கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் நடந்த ஐடி ரெய்டு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரெய்டிற்கு ஆளான நபர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர், பாண்டித்துரை.
நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து உதவி கோட்ட அலுவலக உதவியாளராக பதவி உயர்வு பெற்று அதிமுக ஆட்சியில் செல்வாக்கு பெற்ற நபராக வளர்ந்துள்ளார்.
கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையை கையில் வைத்திருந்தவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரு கட்டத்தில் இவருடன் பாண்டித்துரைக்கு ஏற்பட்ட நெருக்கத்தின் மூலமாக பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினார்.
நெடுஞ்சாலைத்துறையில் அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொண்ட பாண்டித்துரை, துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடனும் நெருக்கமாக இருந்திருக்கிறாராம். இருவருடனும் இருந்த நெருக்கத்தின் காரணமாக கிடைத்த பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் மூலம் அதிகப்படியான சொத்து சேர்த்திருக்கிறார். சொந்த ஊரான புதுக்கோட்டையில் தொடங்கி கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, தோட்டம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகத் தெரிகிறது.
ஒப்பந்ததாரர் பாண்டித்துரையை உன்னிப்பாகக் கவனித்து வந்த வருமான வரித்துறை, இரு தினங்களுக்கு திடீரென ரெய்டில் இறங்கியது. புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் நள்ளிரவுவரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதன்மூலம் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தோப்பு, வணிக வளாகங்கள் என 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகள் வாங்கி குவித்தது கண்டறியப்பட்டது. நேற்றைய தினம் இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டதில் அதிமுக ஆட்சியின் போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.
பாண்டித்துரை தனது உறவினர்கள், பினாமிகள் மூலம் நடத்தி வந்த நிறுவனங்கள் மூலம் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றதாக கூறப்படுகிறது. சாதாரண ரோடு ரோலர் ஓட்டுநரின் மகனாக இருந்த பாண்டித்துரை, அரசு ஒப்பந்ததாரராக மாறி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குறுகிய காலத்தில் சேர்த்துள்ளார்.
அதுவும் இவரது வளர்ச்சி என்பது கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் நடந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டித்துரை செய்த முறைகேடுகள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாண்டித்துரை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அடுத்தகட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் முடுக்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விசாரிக்கப்பட்டால் அதிமுகவின் பெரும்புள்ளி வரை விசாரணை நீள்வதற்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
– பாரூக், சிவகங்கை.