சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சி தாழையூர் பகுதியைச்சார்ந்தவர்
தங்கவேல் வயது 85. நங்கவள்ளி ஒன்றியத்தில் தி.மு.க முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக இருந்த இவர் தற்போது, 18ஆவது வார்டு கிளைச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ஜானகி என்ற மனைவியும், ரத்னவேல், மணி, என்ற 2 மகன்களும் உள்ளனர். தி.மு.க தொடங்கிய காலம் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரிடம் பல்வேறு பரிசுகளை பெற்ற தங்கவேல் தமிழகத்தில் தொடர்ந்துவரும் இந்தியை திணிப்பை எதிர்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில், இன்று காலை இந்தி திணிப்பை எதிர்த்து குரல் குடுத்துக்கொண்டு தாழையூர் தி.மு.க கிளை கட்சி அலுவலகம் வந்தவுடன் திடீரென அவர் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் உடல் முழுவதும் தீ மளமளவென எரிந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியிருந்தார்.
அதில், மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதற்கு என குறிப்பிடப்பட்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தங்கவேலுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தி எதிர்த்து தி.மு.க நிர்வாகி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ச.கலையரசன், மகுடஞ்சாவடி.