தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மீது விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியராக கடந்த 2020 -2021 ஆம் ஆண்டு பணிபுரிந்த எஸ்.கே. முத்து விதிகளை மீறி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் மனுக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது
அந்த மனுவில், ஓட்டப்பிடாரம் வட்டம், பசுவந்தனை கிராமம் புல எண் 384/4 உள்ள சங்குசாமி கோவில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தனியார் ஆக்கிரப்பு செய்துள்ளதற்கும், கடைகள் கட்டவும் வட்டாட்சியர் எஸ்.கே. முத்து துணைபுரிந்து வந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சங்கு சாமி கோவில் நிலம் சம்பந்தப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முருகன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த நிலங்களில் கடைகள் கட்ட இடைக்கால தடை வித்து நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆனந்தி ஆகியோர் கொண்ட இருநபர் அமர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் மாடசாமி என்பவரால் நான்கு கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளதை மறைத்து வட்டாட்சியர் எஸ்.கே. முத்து நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்தது தெரியவந்தது. அதாவது நான்கு கடைகள் உள்ளது என்பதற்கு பதிலாக இரண்டு கடைகள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று 15 .6 .2021 அன்று அரசு வழக்கறிஞருக்கு வட்டாட்சியர் எஸ்.கே. முத்து கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்ட ஜெகவீராண்டியபுரம் கிராமத்தில் தகுதியற்ற நபருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் என்ற புகாரும் வட்டாட்சியர் எஸ்.கே. முத்து மீது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரால் விசாரணை நடத்தப்பட்டு விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோட்டாட்சியரால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் வட்டாட்சியர் எஸ்.கே. முத்து விதிகளை மீறி ஆதாயம் தேடுவதற்காக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டதால் கோட்டாட்சியரின் அறிக்கையின் அடிப்படையில் வட்டாட்சியர் எஸ்.கே.முத்துவை பணியிடை நீக்கம் செய்து இன்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள வட்டாட்சியர் எஸ்.கே. முத்து தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.