சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாலமுருகன். இவர் கடந்த சனிக்கிழமையன்று வீட்டைப் பூட்டிவிட்டு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் திருப்பதி சென்றிருக்கிறார்.
திருப்பதியில் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு இன்று திங்கள்கிழமை காலை 9 மணியளவில் குடும்பத்துடன் சிங்கம்புணரி திரும்பிய பாலமுருகன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று உடனடியாக சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் முத்துமீனாட்சி சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 9 சவரன் நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள், ₹.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அதன் பின்பு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமையிலிருந்து பாலமுருகனின் வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இடைப்பட்ட ஒரு நாளில் வீட்டின் கதவை உடைத்து இந்தக் கொள்ளையை அரங்கேற்றி இருக்கின்றனர். சிங்கம்புணரியில் கடந்த 20 நாட்களுக்குள் நிகழும் மூன்றாவது கொள்ளைச் சம்பவம் இது.
மாவட்ட எல்லையும், தாலுகா தலைநகரமுமான சிங்கம்புணரியில் காவலர்கள் ரோந்து செல்வது வெகுவாகக் குறைந்துள்ளதாக பொதுமக்களிடையே பேச்சு நிலவுகிறது. மேலும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. மாவட்ட எல்லையான சிங்கம்புணரியில் எந்த இடத்திலும் செக்போஸ்ட் ஏதும் இல்லை.
சிங்கம்புணரி காவல் நிலையத்தில் 50 காவலர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் 30க்கும் குறைவான காவலர்களே தற்போது பணியில் உள்ளனர். இது காவலர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போதுமான எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்களை அமைத்து, காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் இடையே எழுந்துள்ளது.
தொடர் திருட்டுச் சம்பவங்கள் சிங்கம்புணரி பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.