அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 6ஆம் தேதி ஏற்றப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் மாடவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.
தீபத்திருவிழாவின் தொடக்கமாக காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளைமுதல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறவுள்ளது. நாளை துர்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.
இந்தாண்டு தீபத் திருவிழாவை காண சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. மேலும், பக்தர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ. வடசென்னை.