கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மரியாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் காரமடை கார் நிறுத்தம் அருகே சோலையன் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 21¾ பவுன் தங்கம், ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை குறித்து செந்தில்குமார் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார் நகைக்கடையை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
நகைக்கடை அமைந்துள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காரமடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீசாரை பார்த்தும் ஒருவர் தப்பியோட முயன்றார். இதனைக்கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கேரள கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தங்கச்சன் மேத்யூ (54) என்பதும், இவர் காரமடையில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளியை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 21¾ பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.